சென்னை : சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப்., குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மதுசூதன ரெட்டி தலைமையில், நேற்று மாலை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சென்ட்ரல் பார்சல் அலுவலகம் நுழைவாயில் அருகே, சந்தேகத்துக்கிடமாக இருவர் நீண்ட நேரமாக நின்றதால், அவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால்,அவர்களின் பைகளை சோதித்த போது, இருவரின் பைகளிலும் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் இருந்தன. உரிய ஆவணங்கள் எதுவுமின்றி கடத்த முயன்றது தெரிந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்து, சென்ட்ரல் ஆர்.பி.எப்., அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன் சீனிவாசன், 27; மற்றும் குடியாத்தத்தைச் சேர்ந்த ஜீவா, 42, என தெரிந்தது.
அவர்களிடம் இருந்து மொத்தம் 708.67 கிராம் தங்க ஆபரணங்கள், 619 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதன் மொத்த மதிப்பு 35 லட்சத்து 43 ஆயிரத்து 230 ரூபாய். இவற்றை, சென்னை வணிக வரி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இருவரிடமும், வணிக வரி அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.