சென்னை : பா.ஜ., மகளிர் அணி துணை தலைவி ஜெயலட்சுமி, 41. இவர், அக்., 19ல் சென்னை திருமங்கலம் போலீசில் அளித்த புகார் மனுவில், 'நான் சினேகம் அறக்கட்டளை நடத்தி வருகிறேன்.
பாடலாசிரியர் சினேகன், என் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி, பண மோசடி செய்ததுடன், எனக்கு எதிராக அவதுாறு கருத்துகளை பரப்பி வருகிறார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.இதன்படி, சினேகன் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோல, சினேகன் அளித்த புகாரில், ஜெயலட்சுமி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சினேகன் தாக்கல் செய்த மனு, நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சினேகன் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, போலீசுக்கு இடைக்கால தடை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.