சென்னை : சீர்காழியில் வழக்கறிஞர் மீதான தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நேற்று முறையீடு செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி வ.உ.சி., தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 43. வழக்கறிஞரான இவர், சீர்காழி தென்பாதி பிரதான சாலையில், அலுவலகம் நடத்தி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன், இவரது அலுவலகத்தை சீர்காழியை சேர்ந்த ராஜா, அவரது மகன்கள் உள்ளிட்டோர் சேதப்படுத்தி, வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவத்தை கண்டித்து, நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் ஆஜராகி, 'சீர்காழியில் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முறையிட்டனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.
Advertisement