சென்னை: வடகிழக்கு பருவமழையால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள நீர்வளத்துறை ஏரிகள் நிரம்பி வழிகின்றன.நீர்வளத்துறை பராமரிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் 578 ஏரிகள் உள்ளன. இதில், வடகிழக்கு பருவமழையால் கிடைத்த நீரால், 130 ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில், 106 ஏரிகள் நிரம்பும் கட்டத்தை எட்டியுள்ளன. அதேபோல, 130 ஏரிகளில் 50 முதல் 75 சதவீதம் நிரம்பியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 564 ஏரிகள் உள்ளன. இவற்றில், 182 ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், 211 ஏரிகள் நிரம்பும் கட்டத்தில் உள்ளன. இதேபோல, 109 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதம் நீர்இருப்பு உள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இவற்றில் 88 ஏரிகள் நிரம்பிய நிலையில், 39 ஏரிகள் நிரம்பும் கட்டத்தில் உள்ளன. இது மட்டுமின்றி 135 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதம் அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.
சென்னை
விரிவாக்கப்பட்ட, சென்னையில் 28 ஏரிகள் உள்ளன. இவற்றில் 12 ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், இரண்டு ஏரிகள் நிரம்பும் கட்டத்தில் உள்ளன. இதுமட்டுமின்றி 14 ஏரிகளில் 75 சதவீத அளவிற்கு நீர்இருப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்று முதல் மீண்டும் தீவிரம் அடையும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எனவே, இந்த சுற்று மழையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மேலும் பல ஏரிகள் நிரம்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.