சுர்குஜா: இந்தியாவில் வாழும் அனைவரும் ஹிந்துக்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தொண்டர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: ஹிந்துத்துவம் தான் உலகில் அனைவரையும் அழைத்து செல்வதை நம்புகிறது.
இந்தியாவில் வாழும் அனைவரும் ஹிந்துக்கள் என ஆர்எஸ்எஸ் துவங்கப்பட்ட 1925ல் இருந்தே கூறி வருகிறோம். மதம், கலாசாரம், மொழி, உணவுப் பழக்கம், சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், இந்தியாவை தங்கள் தாய் மண்ணாக கருதி, வேற்றுமையில் ஒற்றுமை பண்பாட்டுடன் வாழ விரும்புவோர் ஹிந்துக்கள் தான்.

ஹிந்துத்துவாவின் சித்தாந்தம் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது; மக்களிடையே ஒற்றுமையை நம்புகிறது. அனைத்து இந்தியர்களின் டி.என்.ஏ.,வும் ஒன்றுதான். பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறோம்.
மற்றவர்களின் நம்பிக்கையை மாற்ற முயலக்கூடாது. ஒவ்வொரு பாதையும் ஒரு பொதுவான இடத்திற்கு இட்டுச்செல்கிறது. அனைத்து மத நம்பிக்கைகளையும் அவர்களின் சடங்குகளையும் மதிக்க வேண்டும். மற்றவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் சுயநலமாக இருக்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.