பெங்களூரு: வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 25வது தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று (நவ.,16) முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியதாவது:
கடந்த 2015ல் உலகளாவிய புதிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது. தற்போது 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். 2021ம் ஆண்டில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை இருமடங்கு ஆகியுள்ளது. இந்தியாவில் புது கண்டுபிடிப்புக்கான குறியீட்டில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.

பெங்களூரு தொழில்நுட்பத்தின் தாயகம். இது ஒரு உள்ளடக்கிய மற்றும் புதுமையான நகரம். தொற்றுநோய்களின் போது, ஏழை மாணவர்களும் கல்வி கற்க ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள தொழில்நுட்பம் உதவியது. இல்லையென்றால் மாணவர்கள் 2 ஆண்டுகள் முழுவதுமாக கல்வியை இழந்திருப்பார்கள்.
வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது. முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் நாடாக இந்தியா அறியப்படுகிறது. இவ்வாறு அவர் உரையாற்றினார்.