உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம் ...
ஆர்.ராஜேஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு அளித்தது செல்லும்' என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இதற்கு, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகள் சிலவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
![]()
|
சாக்ரடீசுக்கு அடுத்த வாரிசாக நடமாடிக் கொண்டிருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தத்துவ முத்து திருமாவளவன், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, வழக்கை ஒன்பது நீதிபதிகள் இடம் பெறும் அமர்வின் விசாரணைக்கு பட்டியலிடும்படி கோரிக்கை விடுப்போம்' என்று கர்ஜித்துள்ளார்.
ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரித்து, அதில், ஐந்து நீதிபதிகள், 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும், நான்கு நீதிபதி கள் அதற்கு எதிராகவும் தீர்ப்பளித்தால், அடுத்து, பதினோரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண் டும் என்று கொடி பிடிப்பரோ என்னவோ?
மேலும், 1௦ சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பை, மாநில அரசு அமல்படுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வில்லை. அதனால், 'தமிழகத்தில், 1௦ சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாது' என்று கொக்கரிக்கிறார், எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான அமைச்சர் பொன்முடி.
தி.மு.க., மற்றும் வி.சி.,க்களை பொறுத்தவரை, 1௦ சதவீத இட ஒதுக்கீடு பிராமணர்களுக்கானது என்பது அவர்களின் எண்ணம். பிராமணர்கள் மட்டுமின்றி, கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த, 7௦ ஜாதி ஏழைகளும் பயன் பெறுவர் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில், அவர்கள் இல்லை.
நாடு சுதந்திரமடைந்து, 75 ஆண்டுகளாக, எந்தவிதமான ஒதுக்கீட்டு சலுகையும் இல்லாமல், இந்த நாட்டில் பிராமணர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனரா இல்லை செத்து மடிந்து விட்டனரா? போங்கப்பா! நீங்களும் உங்கள் இட ஒதுக்கீடும்!
கூகுள் நிறுவனத்தின் தலைவராக பதவி வகிக்கும் சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர், இட ஒதுக்கீட்டிலா படித்து பட்டம் பெற்று, அமெரிக்காவிலும், மற்ற உலக நாடுகளிலும் கோலோச்சுகின்றனர்.
'அடங்க மறு, அத்து மீறு!' என்று, ஏராளமான இளைஞர்களை உருப்பட விடாமல் செய்து கொண்டிருக்கும் திருமாவால், தன் இன மக்களில் சிலரையாவது, கூகுள் பிச்சை போல உருவாக்கிக் காட்ட முடியுமா... இல்லை அப்படி உருவாக்கி இருப்பதாக, யாரையாவது சுட்டிக் காட்டத் தான் இயலுமா?
![]()
|
எந்தத் தீர்ப்பும், 'சாதகமாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம்; பாதகமாக இருந்தால் முரண்டு பிடிப்போம்' என்ற மனோபாவம் உடைய கழகத்தினருக்கும், அதன் கூட்டணி கட்சியினருக்கும், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பது சரிப்படாது; கட்டப் பஞ்சாயத்து ஒன்று தான் ஒரே வழி; சிறந்த வழி!
கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பை எதிர்த்தும் பேச முடியாது; மேல்முறையீடும் செய்ய முடியாது. சொன்னால் சொன்னது தான்!
Advertisement