சென்னை-'கால்பந்தாட்ட மாணவி உயிரிழப்பு போன்ற நிகழ்வுகளை தவிர்க்க, அரசு டாக்டர்களுக்கு இலக்கு நிர்ணயித்து அழுத்தம் தரக் கூடாது' என, அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
![]()
|
சங்கத் தலைவர் சாமிநாதன், செயலர் ராமலிங்கம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை, கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து கொண்ட கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்தது வருத்தத்திற்குரியது.
இதுபோன்ற அறுவை சிகிச்சைகள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் போன்ற அனைத்து வசதிகளும் நிறைந்த பெரிய மையங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்தன.
சிறப்பு சுகாதார திட்டத்தின் கீழ், குறைவான வசதிகள் உள்ள மாவட்ட மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகளிலும், இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அறுவை சிகிச்சை செய்யாத டாக்டர்களிடம், உயரதிகாரிகள் விளக்கம் கேட்கின்றனர்.
மேலும், அறுவை சிகிச்சைக்கு இலக்கு நிர்ணயிப்பது, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகிறது. பெரியார் நகர் அரசு மருத்துவமனை போன்ற சிறிய மருத்துவமனையில், பணிச்சுமை அதிகம் இருக்கும்.
டாக்டர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறு செய்ததுபோல், பொது வெளியில் சித்தரிப்பது வருங்காலத்தில் அரசு டாக்டர்கள், அரசு மருத்துவமனைகளில் உயர்தர அறுவை சிகிச்சை செய்யும் மன நிலையை அழித்து விடும்.
எனவே, துறை ரீதியாக முறையான, விரிவான விசாரணை வாயிலாக, சுகாதார கட்டமைப்பில் தகுந்த மாற்றங்களை செய்ய வேண்டும்.
டாக்டர்களுக்கு இலக்கு கொடுத்து அழுத்தம் தரக் கூடாது. அதுவே, இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க உதவும்.
![]()
|
நர்ஸ்கள், உதவியாளர் பற்றாக்குறை ஆகியவை, டாக்டர்களுக்கான பணிச் சுமை அதிகரிக்க காரணமாக உள்ளது.
பல அரசு மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சைகளுக்குத் தேவையான, சில கருவிகள் இல்லாததால், டாக்டர்கள் அவர்கள் சொந்த உபகரணங்களையே பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்ற சேவை மனப்பான்மையுடன் செயல்படும் அரசு டாக்டர்களை வன்மம் கொண்டு சித்தரிப்பது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement