மும்பை: காங்கிரஸ் எம்.பி., ராகுல் யாத்திரையின் இடையே நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு பதிலாக நேபாள நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்., எம்.பி., ராகுல் பாரத் ஜோடோ என்னும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரியில் துவங்கிய நடைபயணம் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை தொடர்ந்து தற்போது மஹாராஷ்டிராவில் தொடர்ந்து வருகிறார்.

இன்று பதூர் பகுதியில் இருந்து நடைபயணத்தை துவங்கினார். இன்றைய நடைபயணத்தின்போது காந்தி வேடமிட்ட சிறுவர்கள் ராகுலின் வருகைக்காக காத்திருந்தனர். நடைபயணம் துவங்கியதும் காந்தி சிறுவர்களுடன் இணைந்து ராகுல் உற்சாகமாக நடந்து சென்றார்.
நேபாள தேசிய கீதம்
முன்னதாக நேற்றைய (நவ.,16) யாத்திரையின் முடிவில் வாஷிம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் சுமார் 30 நிமிடங்கள் பேசினார். முடிவில் ராகுல், தேசிய கீதம் இசைக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நிற்க, இந்திய தேசிய கீதமான ‛ஜன கண மன' பாடலுக்கு பதிலாக நேபாள தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல், உடனடியாக பாடலை நிறுத்த அறிவுறுத்தினார். பின்னர் நிறுத்தப்பட்டு இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் முதன்மை தலைவரான ராகுலை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த அக்கட்சியினர் முயற்சித்துவரும் சூழலில் அவர் பங்கேற்ற கூட்டத்திலேயே இந்திய தேசிய கீதத்திற்கு பதிலாக நேபாள தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் சிரித்து சமாளித்தனர்.