1. அன்றே கொதித்த அடுப்பு
மனிதன் உணவைச் சுட்டு தின்ன, தீ மூட்டி அடுப்பை உருவாக்கியது எப்போது? அது இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு என்றுதான் தொல்லியலாளர்கள் கருதினர். ஆனால், இஸ்ரேலின் தொல்லியல் மேட்டில் கிடைத்த 6.5 அடி நீள மீன் எலும்புச் சான்றுகளின்படி, மனிதன் தீயை வைத்து சமைப்பதை 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தொடக்கிவிட்டான் என்பது தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு 'நேச்சர் எகாலஜி அண்ட் எவலூசன்' இதழில் வெளிவந்துள்ளது.
2. தடுமாறும் தேனீக்கள்
பயிர்களின் வண்ணம், மணம் ஆகியவற்றோடு, அவற்றைச் சுற்றி எழும் உயிரி மின் அலைகளையும் வைத்துத்தான், தேனீக்கள் பூக்களின் இருப்பிடத்தை உணர்ந்து வந்து அமர்கின்றன. செயற்கை உரங்களால், பயிர்கள் உருவாக்கும் உயிரி மின்னலைகளின் அளவு தாறுமாறாகிவிடுகிறது. இதனால் தேனீக்களால் பூக்களை அடையாளம் காண முடியாதுபோகிறது. இயல்பாக நடக்கும் மகரந்தச் சேர்க்கையும் நடக்காமல் தடைபடுகிறது என இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இயற்கை உரங்களுக்கு மாறினால் எல்லாம் சரியாகிவிடும்.
3. இறக்குவதே பலம்
பளு தூக்குவது தசைகளுக்கு பலம் கூடும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? ஆனால், ஆஸ்திரேலியவின் எடித் கோவன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எடையை மேலே தூக்குவதைவிட, எடையைப் பிடித்து கீழிறக்குவதே அதிக பலத்தைத் தரும் என்கின்றனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, எடையைப் பிடித்து மேலே தூக்கும்போது, தசைகள் இறுகி, குறுகுகின்றன. ஆனால், எடையைப் மேலிருந்து கீழிறக்கும்போது, தசைகள் நீட்சியடைகின்றன. இந்த செயல்பாட்டால் மட்டும் கணிசமாக தசை வளர்கிறது என அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
4. பதற்றம் தணிக்கும் தியானம்
மனப் பதற்றத்தைத் தணிப்பதற்கு, 'மைண்ட்புல் மெடிடேசன்' எனப்படும் மனநிறை தியான முறை சிறந்ததா? இல்லை, மனச் சுமையைக் குறைக்கும் 'ஆன்டி டிப்ரசன்ட்' மாத்திரைகள் உகந்ததா? இது குறித்து, அமெரிக்காவிலுள்ள ஜியார்ஜ் டவுன் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 8 வார சோதனை செய்தனர். அதன் முடிவிவ், மாத்திரை உட்கொண்டவர்களுக்கு எந்த அளவு பதற்றம் தணிந்ததோ, அதே அளவுக்கு, மாத்திரை ஏதுமின்றி, மனநிறை தியானம் மட்டுமே செய்தோருக்கும் பதற்றம் தணிந்திருந்தது தெரியவந்தது.
5. ஒளிவேக சாதனை
ஆப்டிகல் பைபர் கேபிள் எனப்படும் ஒளி இழை வடம் மூலம் தகவல் அனுப்புவதில் புதிய சாதனையை ஜப்பானிலுள்ள நெட்வொர்க் ஆய்வு நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளனர். வழக்கமான ஒளி இழை வடத்தின் மூலம், நொடிக்கு 1.53 பெட்டாபிட்ஸ் அளவுக்கு வேகமாகவும், அடர்த்தியாகவும் தகவல்களை அவர்கள் பரிமாறி சாதித்துள்ளனர். தற்போது இணையத்தில் புழங்கும் அத்தனை தகவல்களையும் ஒரே நொடியில் ஒரிடத்திலிருந்து வேறிடத்திற்கு அனுப்புவதற்கு இணையான சாதனை இது என வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர்.