இருபத்தியோராம் நுாற்றாண்டின் கால்வாசி முடிவதற்குள், லேசர் கதிர்கள் ராணுவ ஆயுதமாக மாறி உள்ளது. அண்மையில், பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் டிராகன்பயர் என்ற ஒரு லேசர் கருவியை ராணுவத் தளவாடமாக ஆக்குவதற்கான சோதனைகளைச் செய்தது.
அதிக சக்தி வாய்ந்த, அதிக தொலைவு பாயக்கூடிய லேசர் கதிர்களை உருவாக்கும் கருவியான டிராகன் பயர், பூமியிலிருந்தபடியே, எதிரி ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்றவற்றை ஒளியின் வேகத்தில் சுட்டுப் பொசுக்கும் திறன் கொண்டது.
கடந்த இரு மாதங்களில், கடல் மற்றும் வான் இலக்குகளை லேசர் கதிர் மூலம் தாக்கி சோதனைகளை நடத்தியது பிரிட்டன்.
லேசர் கதிர் கருவிகளை உருவாக்குவதற்கு கணிசமான செலவு ஆகும். என்றாலும், அவற்றை வைத்து பராமரிப்பதற்கோ, கதிர்களை சுடுவதற்கோ அதிக செலவுகள் ஆகாது. டிராகன் பயர் கருவியை முடுக்கி, ஒரு முறை லேசரால் சுடுவதற்கு 85 ரூபாய் கூட செலவாகாது. ஆனால், தொலைதுார இலக்குகளைக்கூட துல்லியமாக, கடுமையாக இதனால் தாக்க முடியும்.