ஈரோடு: பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில், 2.12 லட்சம் ரூபாய் கைப்பற்ற சம்பவத்தில், ஆய்வாளர் உட்பட, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி, மேட்டூர் சாலை ஊராட்சிகோட்டை மலை அடிவாரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு ஆய்வாளராக சுகந்தி பணியாற்றுகிறார். இங்கு கடந்த, 9ல் ஈரோடு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்தவர்கள், கையில் இருந்த பணத்தை ஜன்னல் வழியாக பின்புறம் உள்ள வாழை தோட்டத்தில் வீசினர். லஞ்ச ஒழிப்பு போலீசார், அலுவலக வளாகத்திலும், வளாகத்தை சுற்றிலும் வீசப்பட்டிருந்த, கணக்கில் வராத, 2.12 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.
அலுவலகத்தில் இருந்த ஆய்வாளர் சுகந்தி உள்ளிட்ட அலுவலர்கள், புரோக்கர்களிடம் போலீசார் விசாரித்தனர். இறுதியாக, ஆய்வாளர் சுகந்தி, புரோக்கர்கள் வரதன், சண்முகம், சந்தோஷ், நல்லசாமி என, 5 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட, 2.12 லட்சம் ரூபாய்க்கான கணக்கை, இவர்கள் தாக்கல் செய்யும்படி, போலீசார் கேட்டுள்ளனர். இது வரை தாக்கல் செய்யவில்லை. ஆய்வாளர் சுகந்தி தொடர்ந்து பணியில் உள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
சோதனை குறித்து போலீசார் கூறியதாவது: பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி, ஈரோடு மாவட்டம் கோபி, நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர். இவரது குடும்பத்தாருக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் போன்றோருடன் பழக்கம் உண்டு. கடந்த ஆட்சி முதல், பெருந்துறை, பவானி உட்பட கொங்கு மண்டலத்திலேயே சுகந்தி பணி செய்து வருகிறார். ஆவணங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்து, சுகந்தி கையெழுத்திடுவார்.
ஆனால் இந்த அலுவலகத்தில், லேனர், நிரந்தர லைசென்ஸ், ரினிவல், வாகனம் ஓட்டிக்காட்டும்போது குறைகள் இருந்தாலும், 'பாஸ்' சான்று பெறுதல், புதிய வாகன எண்கள் என அனைத்துக்கும் பெருந்தொகை வழங்கினால் மட்டுமே பணி நடக்கும். 30க்கும் மேற்பட்ட புரோக்கர்களே, இங்கு அதிகாரிகள் போல செயல்படுவதாக புகார் வந்தது.
தொடர்ந்து கண்காணித்து வந்தோம். ஒவ்வொரு நாளும் நடக்கும் பணிக்கான தொகை, புரோக்கர்கள் வைத்திருந்து, மாலையில் உரியவர்களிடம் ஒப்படைப்பர். கடந்த, 9ம் தேதியும் அதேபோல மாலையில் பணம் ஒப்படைத்த தகவல், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த பின்னரே சோதனை நடந்தது. 2.12 லட்சம் ரூபாய் பறிமுதலானது.
புதிய வாகன பதிவு எண் எதுவாக இருந்தாலும், 'இந்த எண்ணை, எம்.எல்.ஏ., - எம்.பி., - அமைச்சர் கேட்டுள்ளார். ஏற்கனவே ஒருவர் பிளாக் செய்துள்ளார்' எனக்கூறி, மிகப்பெரிய தொகையை பெறுவதில், இந்த அலுவலகத்தில் இருப்பவர்களை மிஞ்ச முடியாது.
இங்கு நடந்த சோதனை மூலம் கைப்பற்றப்பட்ட பணத்தை வைத்தும், உள்ளே பிடிபட்ட புரோக்கர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளோம். சோதனை, கைப்பற்றப்பட்ட பணம், வழக்குப்பதிவு, தொடர் நடவடிக்கை மற்றும் ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அத்துறைக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு கூறினர்.