வேலுார்: தமிழகத்தில், பா.ஜ., ராட்சசன் போலவளர்ந்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
![]()
|
வேலுார் மத்திய மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம், காட்பாடி அடுத்த லத்தேரியில் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
இந்தியாவில் 100 ஆண்டுகள் கடந்த கட்சி திராவிட இயக்கம். இந்த இயக்கத்தினால் தான் நாம் படிக்க முடிந்தது. இல்லாவிட்டால் இன்னமும் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருந்திருப்போம். முன்பு 100 பேருக்கு வேலை கிடைத்தால் அதில் 2 பேர் தான் பிராமணர் அல்லாதவர்கள் இருப்பார்கள். அந்த நிலை மாறியதற்கு காரணம் பெரியார், அண்ணா.
இந்த இயக்கத்தை 50 ஆண்டுகளாக கட்டிக்காத்தவர் கருணாநிதி. அதை இப்போது ஸ்டாலின் செய்து வருகிறார். நாம் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறாம். நமக்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள் 7 லட்சம் கோடி ரூபாய் கடனை விட்டுச் சென்றுள்ளனர். இப்போது முதியோர் பென்ஷன் இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நிதி இலாகாவில் உள்ளவர்கள் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
சில அதிகாரிகளுக்கு நாம் வந்ததே பிடிக்கவில்லை. அந்த நிலைமையை நாம் மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஒன்றியச் செயலாளர்களும் ஒவ்வொரு கிளைக்கு சென்று கூட்டம் நடத்தி ஆதாரத்தை அளிக்க வேண்டும். தவறினால் அவர்கள் மாற்றப்படுவார்கள்.பூத் கமிட்டியை வரும் டிச. மாதத்திற்கும் அமைத்து விட வேண்டும். இதுவரை அ.தி.மு.க., தான் எதிரி என இருந்தது. ஆனால் இப்போது பா.ஜ., ராட்சசன் போல வளர்ந்து வருகிறது. பண பலம், அதிகார பலத்துடன் பா.ஜ., பிசாசு மாதிரி உருவெடுத்து சம பலத்துடன் போராடுவார்கள். இதனால் அவர்களையும் சேர்த்து எதிர்க்க வேண்டிய நிலை உள்ளது.
![]()
|
எம்.பி., தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இந்த முறை 40க்கு 40 வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு நம்மை பார்த்து பயப்படும். இந்த முறை நாம் பெரிய பண திமிங்கலத்தை எதிர்ப்பதால் யாருடன் கூட்டணி என்பதை ஸ்டாலின் பார்த்துக் கொள்வார்.
என் அனுபவம், வயது ஸ்டாலினுக்கு இல்லை. ஆனால் என்னை மிஞ்சக்கூடிய அளவுக்கு அவரை கருணாநிதி வளர்த்து விட்டுள்ளார். என்னை வளர்ந்த என் தலைவன் மகனை என் தோளில் சுமப்பதில் எனக்கென்ன வெட்கம். இவ்வாறு அவர் பேசினார்.