வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ராஜிவ் கொலையாளிகள் 6 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான ராஜிவ், 1991ல் தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வந்த போது, ஸ்ரீபெரும்புதுாரில் விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டர். இந்த வழக்கில் நளினி, பேரறிவாளன் உட்பட 26 பேருக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் துாக்கு தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. மேல்முறையீட்டில், சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் துாக்கு தண்டனை உறுதியானது.
|
பின், அவர்களின் துாக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், சாந்தன், பேரறி வாளன் ஆகியோர், ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.
பேரறிவாளனின் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, 'பரோல்' கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ், ,அவரை கடந்த மே மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளனை விடுதலை செய்ததுபோல், தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என, நளினி உட்பட ஆறு பேரும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
பேரறிவாளனை போலவே, இந்த ஆறு பேரும், அதே நிவாரணத்தை பெறத் தகுதியானவர்கள். எனவே, இவர்கள் ஆறு பேர் மீதும் வேறு வழக்குகள் எதுவும் இல்லை என்றால், அவர்களை விடுதலை செய்யலாம் என கடந்த நவ.11ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.