ஆமதாபாத்: 'தொங்கும் பாலத்தை பராமரித்த நிறுவனம், முன் அனுமதியின்றி எந்தத் தகவலும் தெரிவிக்காமல் திறந்து விட்டதே, 135 பேர் உயிரிழந்த விபத்துக்கு காரணம்' என, குஜராத்தின் மோர்பி நகராட்சி, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மோர்பியில் இருந்த, பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தொங்கும் பாலம், அக்., 30ல் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில், 135 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் பதிலளிக்கும்படி, மோர்பி நகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
பதில் மனு
இதன்படி மோர்பி நகராட்சி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆமதாபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும், அஜந்தா கடிகாரம் தயாரிப்பு நிறுவனத்துக்கு, பாலத்தை பராமரிக்கும் ஒப்பந்தம், 2007ல் வழங்கப் பட்டது. அந்த ஒப்பந்தம், 2017ல் முடிவுக்கு வந்தாலும், அந்த நிறுவனம் தொடர்ந்து பராமரித்து வந்தது. பாலம் வலுவில்லாமல் இருப்பதாகவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த நிறுவனம் தொடர்ந்து கூறி வந்தது. இதையடுத்து, 2022 மார்ச் 8ம் தேதி அந்த நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, 15 ஆண்டுகள் பராமரிக்கும் உரிமம் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, மார்ச் மாதத்தில் அந்தப் பாலம் மூடப்பட்டது. பராமரிப்பு பணி, 8 - 12 மாதங்கள் நடைபெறும் என கூறப்பட்டது.

தகவல் இல்லை
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் முடிந்ததாக நகராட்சிக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. மேலும் நகராட்சி ஆய்வு செய்வதற்கு முன்பாகவே, எந்தத் தகவலும் தராமல், முன் அனுமதி பெறாமல் பாலத்தை திறந்துள்ளனர். அங்கு என்ன பணிகள் நடந்தது என்பது குறித்து நகராட்சிக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.