வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'குரூப் - 1' தேர்வு நாளை நடக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் நாளை இயங்குமா, விடுமுறையா என, குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, தீபாவளிக்கு மறுநாள் அக்., 25ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளுக்கு கூடுதலாக ஒரு நாள், விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை பள்ளிகள் செயல்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., ஏற்கனவே அறிவித்தபடி, குரூப் - 1 முதல்நிலை தேர்வு, நாளை நடக்க உள்ளது. இதற்காக, தமிழகம் முழுதும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, குரூப் 1 தேர்வுக்கான கண்காணிப்பாளர் பணியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு சில பாடங்களுக்கு, நாளை பருவ இடை தேர்வும் நடக்கிறது.
இந்த நிலையில் குரூப் 1 தேர்வு மையம் அமைக்கப்பட்ட பள்ளிகளில் நாளை பள்ளிகள் செயல்படமுடியுமா என்றும், குரூப் 1 தேர்வு பணி ஒதுக்கப்பட்ட ஆசிரியர்கள், பள்ளிகளில் பணிக்கு வர முடியாத நிலை ஏற்படும் என்றும், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நாளை பள்ளி வேலைநாள் உண்டா, இல்லையா என, தெளிவான முன் அறிவிப்பு வெளியிடுமாறு, பள்ளிக்கல்வி துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.