ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். இதனையடுத்து அவரது மகனும் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா 1980ல் லோக்சபா தேர்தலில் வெற்றிப்பெற்று அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார். 1982ல் காஷ்மீர் முதல்வர் ஆனார்.
அதன்பிறகு 1986 மற்றும் 1996ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிப்பெற்று அம்மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார். தற்போது 85 வயதான பரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் தனது கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது, ‛இப்போது கட்சியை வழிநடத்த தனது உடல்நிலை ஈடுகொடுக்கவில்லை' எனக் கூறி கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

டிசம்பர் 5ம் தேதி புதிய கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் பரூக் அப்துல்லா தெரிவித்தார். கட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வந்தாலும், அவரது மகனும், கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா தான் கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
ஏனெனில் உமர் அப்துல்லாவே தன்னுடைய அரசியல் வாரிசாக பல இடங்களில் பரூக் முன்னிலைப்படுத்தியுள்ளார். எனவே, பல கட்சிகளில் தொடரும் வாரிசு அரசியலையே தேசிய மாநாட்டு கட்சியிலும் துவங்கியுள்ளது.