வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவில் தயாரான முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக 2020ம் ஆண்டு 'இன்ஸ்பேஸ்' என்ற அமைப்பு நிறுவப்பட்டது.
\இதன்மூலம் ராக்கெட், செயற்கைக்கோள் தயாரித்தல் பணிகளில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன. அந்தவகையில் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், 'விக்ரம் - எஸ்' என்ற பெயரில் ராக்கெட் தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த ராக்கெட், மூன்று செயற்கைக்கோள்களை சுமந்தபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று (நவ.,18) காலை 11:30 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 545 கிலோ எடை கொண்ட ‛விக்ரம்-எஸ்' ராக்கெட் மூலம் செலுத்தப்படும் செயற்கைகோள்கள் புவி மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக 'விக்ரம்' என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.