முதல்வர் ஸ்டாலின்: கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம். ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது மரணம், அவரது குடும்பத்துக்கும், மாநில விளையாட்டுத் துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை, அனைத்தும் பிரியாவின் உயிருக்கு ஈடாகாது.
டவுட் தனபாலு: ஒரு மாபெரும் சோகத்தை நாலு வரியில சிம்பிளா முடிச்சிட்டீங்களே... இதே சம்பவம் நீங்க எதிர்க்கட்சியாக இருந்தப்ப நடந்திருந்தால், மாபெரும் போராட்டம் நடத்தி, துறையின் அமைச்சர், ஏன் முதல்வரே கூட ராஜினாமா செய்யணும்னு கொதிச்சிருப்பீங்களே... என்ன பண்ணுவது... பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அசமந்தமா இருக்கு என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக காங்., துணைத் தலைவர் ராம.சுகந்தன்: முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த குற்றத்திற்காக சிறைவாசம் அனுபவித்தவர்களை, வி.சி., கட்சியின் துணை பொதுச் செயலர் வன்னியரசு, இனிப்பு ஊட்டி வரவேற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
டவுட் தனபாலு: இதையே காரணம் காட்டி, உங்க கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், 'ஒண்ணு கூட்டணியில் நாங்க இருக்கணும் அல்லது வி.சி., இருக்கணும்' என்ற நிபந்தனையை உங்க கட்சியால விதிக்க முடியுமா என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தாங்களேன்!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: தி.மு.க.,வை வீழ்த்த, ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை பழனிசாமி காண்பித்துள்ளார். அவருடன் செல்வேன் என, அரைக்கால் சதவீதம் கூட நான் கூறியதில்லை. லோக்சபா தேர்தலில், பா.ஜ., அல்லது காங்கிரஸ் கட்சியுடன், நாங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.
டவுட் தனபாலு: ஏதோ, பா.ஜ.,வும், காங்கிரசும் உங்க கட்சியுடன் கூட்டணி வைக்க, 'க்யூ'வில் நிற்பது போல, 'பில்டப்' தர்றீங்களே... பழனிசாமியே சேர்த்துக்காத உங்களை, ரெண்டு தேசிய கட்சிகளும் எப்படி சேர்த்துக்கும் என்ற, 'டவுட்' உங்க மனதில் எழவில்லையா?