திண்டுக்கல்:'கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை; அங்கு பல தவறுகள் நடக்கிறது' என, நிதியமைச்சர் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.
அதற்கு, 'ரேஷன் கடைகளை பற்றி தெரியாதவர்கள், திருப்தியடைய வேண்டிய அவசியம் இல்லை' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, பதிலடி கொடுத்து உள்ளார்.
அமைச்சர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல், தி.மு.க., அரசின் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டுறவு விழாவில், தமிழக நிதிஅமைச்சர் தியாகராஜன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
மக்களுக்கு சேவை செய்யும் துறையாக, கூட்டுறவுத் துறையை மாற்ற வேண்டும். இத்துறையின் செயல்பாட்டு திறனையும், தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கப்படாமல் இருப்பதால், பல தவறுகள் நடக்கின்றன.
நிதியமைச்சராக, கூட்டுறவுத்துறை செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மூத்த அமைச்சரான பெரியசாமியின், கூட்டுறவு துறை குறித்து, நிதியமைச்சர் பகிரங்கமாக, எதிர்க்கட்சி தலைவர் போல விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு, அமைச்சர் பெரியசாமி காட்டமாக பதில் அளித்துள்ளார்.
திண்டுக்கல்லில், நேற்று அமைச்சர் பெரியசாமி அளித்த பேட்டி:
கூட்டுறவுத் துறையில், அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிப்படைத்தன்மையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
எங்கள் துறை பற்றி குறை கூறியவரிடம், 'எங்கே குறை நடக்கிறது' என்று கேளுங்கள். நாங்கள், ஏழு கோடி மக்கள் திருப்தியைத் தான் எதிர்பார்க்கிறோம்.
முதல்வர் ஸ்டாலின் திருப்தி அடைய வேண்டும். அதற்கு நாங்கள் வேலை செய்வோம். வேறு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நான், 50 ஆண்டு கால அரசியலில் இருக்கிறேன்.
மக்களுக்கு அரசின் திட்டத்தை சேர்க்க வேண்டியது தான் எங்கள் வேலை; நாங்கள் வேலைக்காரர்கள் தான்.
எங்கள் துறை மக்களுக்கான துறை. குறையை தெரிவித்தால் நிவர்த்தி செய்யப்படும். ரேஷன் கடைகளை பற்றி தெரியாதவர்கள் திருப்தியடைய வேண்டிய அவசியம் இல்லை; நாங்கள் நிதி கேட்கவில்லை.
நான் சுய லாபத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. ஒரு பைசா இல்லாமல், 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளோம். அ.தி.மு.க., கோட்டையாக இருந்த திண்டுக்கல்லை, தி.மு.க., கோட்டையாக மாற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய அமைச்சர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது, தி.மு.க., அரசிற்கு தலைவலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.