உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம் .........
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: '
ஏழைகளுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 1௦ சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் வாயிலாக, பிராமண சமுதாயத்தினர் மட்டுமே முழுமையாக பயனடையப் போவதாக நினைத்து, கழக ஆட்சியாளர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கூப்பாடு போடுகின்றனர்.
![]()
|
உண்மையில், பொருளாதார ரீதியிலான இந்த இடஒதுக்கீடு, எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, தமிழகத்தில் கொண்டுவர ஆசைப்பட்டது. அப்போது, கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் முயற்சி தடைபட்டது. இன்று பிராமணர்களுக்கான இடஒதுக்கீடு என்று பொய் பிரசாரம் செய்கின்றனர் தி.மு.க.,வினர்.
உண்மையில் இந்த ஒதுக்கீட்டால், பிராமணர்களை தவிர, மலங்கரா சிரியன், தாவூர், மிர், நவாப், அன்சாரி லப்பை, ராவுத்தர் அல்லாத முஸ்லிம்கள், 501 செட்டியார்கள், ஆற்காடு முதலியார், ஆற்காடு வெள்ளாளர், ஆரிய வைசிய செட்டியார், கொங்கு நாயக்கர், மேனன், நம்பியாரை உள்ளடக்கிய நாயர், நாட்டுக்கோட்டை செட்டியார், ரெட்டியார், சைவ வெள்ளாளர், வீர சைவர் என, 79 சமூகத்தினர் பயன் அடைய உள்ளனர்.
இது, ஜாதி அடிப்படையிலானது அல்ல... மாத வருமானம், 66 ஆயிரத்து 667 ரூபாய்க்கு மேல் இருந்தாலோ அல்லது 5 ஏக்கர் நிலம் இருந்தாலோ அல்லது 1,000 சதுர அடிக்கு மேலான வீடு இருந்தாலோ, இந்த 1௦ சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற முடியாது.
அதை மறைத்து, ஜாதி பாகுபாட்டை துாண்டும் விதத்தில், தி.மு.க.,வினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது. பொருளாதார சமூக கலப்பு முறை தான், உண்மையான சமூக நீதி; வெறும் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீடு என்பது, போலி சமூக நீதியாகும்.
![]()
|
மேலும், 'எந்த ஒரு இட ஒதுக்கீடும், என்றென்றும் நீடிக்கக் கூடாது. அது, வெற்றிகரமாக செயல்பட அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு, மாற்றி அமைக்கப்பட வேண்டும்' என்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களும் சரியானவையே.
எது எப்படியோ, எம்.ஜி.ஆர்., அன்று செய்ய நினைத்ததை, மத்திய அரசு செய்து விட்டது. இந்த ஒதுக்கீட்டிற்கு எதிராக ஸ்டாலின், திருமா போன்றவர்கள் போடும் சமூக நீதி கோமாளி வேடம் நிச்சயம் எடுபடாது.