இடா நகர்: முந்தைய ஆட்சியாளர்கள், வட கிழக்கு மாநிலங்களை புறக்கணித்ததுடன், எல்லை பகுதிகளை கடைசி கிராமமாக கருதினர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தின் இடா நகரில் உள்ள பசுமை விமான நிலையம் மற்றும் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
640 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம்

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே இரண்டு விமான நிலையங்கள் உள்ளன. தற்போது மூன்றாவதாக, பிரதமர் மோடி திறந்து வைத்த பசுமை விமான நிலையம், தலைநகர் இடா நகர் அருகேயுள்ள ஹோலோங்கியில், அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், விமான நிலையம் அமைக்கப்படுமா என மக்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இதற்கான திட்டம் 2005ல் தயாரானாலும் கிடப்பில் போடப்பட்டது.

பிறகு, மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் 2019 பிப்.,9 ல் தான் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமான பணிகள் 2020 டிச., மாதம் துவங்கியது. கோவிட் அச்சுறுத்தலையும் தாண்டி குறிப்பிட்ட காலத்திற்குள் ரூ.645 கோடியில் 690 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த விமான நிலையம், அனைத்து கால நிலைகளையும், 'பிசி'யான நேரங்களில் 300 பயணிகளையும் கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, 2.3 கி.மீ., தூரம் ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏர்பஸ் ஏ320 மற்றும் போயிங் 737 விமானங்களை இயக்க முடியும்.
மாநிலங்களை இணைக்கும்

இந்த விமான நிலையத்திற்கு டோனி போலோ என பெயரிடப்பட்டுள்ளது. டோனி என்றால், சூரியின் என்றும், போலோ என்றால் சந்திரன் என்றும் அர்த்தம். அருணாச்சல பிரதேசத்தின் கலாசாரத்தை குறிக்கும் வகையில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தலைநகர் இடா நகர் அருகே உள்ள அமைக்கப்பட்டுள்ள பசுமை விமான நிலையம், அருணாச்சல்லையும் மற்ற மாநிலங்களையும் பயணிகள் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவை மூலம் இணைக்கும்.
அதிகரிப்பு

மோடி திறந்து வைத்த பசுமை விமான நிலையத்தையும் சேர்த்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 16 ஆக இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு 2014ம் ஆண்டு வரை 9 விமான நிலையங்கள் இருந்தன. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, வட கிழக்கு மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு 7 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2014 ல் வாரத்திற்கு 852 ஆக இருந்த விமான பயணங்கள், தற்போது 113 சதவீத அதிகரித்து 2022ல் வாரத்திற்கு 1817 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, இடா நகரில் திறக்கப்பட்டுள்ள பசுமை விமான நிலையம் மூலம், அருணாச்சல பிரதேசத்தில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில், ரூ.8,450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கமெங் நீர்மின் நிலையத்தையும் மோடி திறந்து வைத்தார்.
கூச்சல்
பிறகு நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 2019ம் ஆண்டு, விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினேன். அப்போது தேர்தல் வந்தது. இதனால், விமான நிலையம் வராது.தேர்தல் காரணமாக தான் மோடி அடிக்கல் நாட்டினார் என அரசியல் விமர்சகர்கள் கூச்சல் போட்டனர். தற்போது விமான நிலையம் திறக்கப்பட்டது அவர்கள் முகத்தில் அறைந்தது போல் உள்ளது.
புறக்கணிப்பு

சுதந்திரத்திற்கு பிறகு, வடகிழக்கு மாநிலங்கள் வேறு மாதிரியான சகாப்தத்தை எதிர்கொண்டன. பல ஆண்டுகளாக இந்த பிராந்தியம் புறக்கணிக்கப்பட்டது. வாஜ்பாய் பிரதமரான போது, அதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது தான், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தனியாக அமைச்சர் நியமிக்கப்பட்டார்.
முதல் கிராமம்

இதன் பிறகு வந்த அரசுகள், வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி, மாற்றத்திற்கான சகாப்தத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள்.வடகிழக்கு மாநிலங்கள் நீண்ட தூரத்தில் உள்ளதாக கருதிய முந்தைய அரசுகள், எல்லை பகுதிகளை கடைசி கிராமங்களாக நினைத்தன. ஆனால் அதனை நாட்டின் முதன்மை கிராமமாக எங்களது அரசு நினைத்து வருகிறது. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.