வாரணாசி: ''நாட்டின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழின் பெருமைகளை பாதுகாப்பது, ௧௩௦ கோடி இந்தியர்களின் பொறுப்பு. இதில், மொழி ரீதியிலான பேதங்களை கைவிட்டு, உணர்வு பூர்வமாக அனைவரும் இணைய வேண்டும்,'' என, காசி தமிழ் சங்கமம் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான காசி என்றழைக்கப்படும் வாரணாசி உள்ளது. பழங்காலத்தில் இருந்தே, காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே, கலை, கலாசாரம், ஆன்மிக ரீதியாக நெருங்கிய தொடர்பு உள்ளது.
கலாசாரம், பண்பாடு
இந்த உறவு குறித்து இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அறிந்து கொள்ளவும், இரு மாநில கலாசாரம், பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்களை பகிர்ந்து கொள்ளவும், 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கல்வி அமைச்சகம் செய்துள்ளது. இத்துறையுடன் உத்தர பிரதேச அரசு, மத்திய அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து செயல்படுகின்றன.சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம், வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும் இந்த முயற்சியில் இணைந்துள்ளன. இது தொடர்பான நிகழ்ச்சிகள், ஒரு மாதத்துக்கு நடத்தப்பட உள்ளன.

காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்து பேசியதாவது: நாட்டின் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் இருந்தபோதிலும், அதற்கு உரிய மரியாதை கொடுக்கப்படாமல் இருந்துள்ளது. தமிழ் மொழியை புறக்கணிப்பது, நாட்டுக்கு செய்யும் அவமதிப்பாகும். மொழி ரீதியிலான பாகுபாடுகளை களைத்து, உணர்வு பூர்வமாக அனைவரும் சங்கமிக்க வேண்டும். இது, 130 கோடி இந்தியர்களின் பொறுப்பாகும்.
தமிழை ஒரு சில பகுதிக்குள் கட்டுப்படுத்துவது, அதற்கு செய்யும் பெரிய பாதிப்பாகும். தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள நீண்ட கால உறவானது, காலாசார மற்றும் நாகரீக ரீதியிலானது. உலகின் மிகவும் பழமையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழின் மையங்களாக இந்த பிராந்தியங்கள் உள்ளன.
காசியில், காசி பட்டு என்றால், தமிழகத்தில் காஞ்சி பட்டு சிறந்து விளங்குகிறது. தமிழக திருமணங்களில் காசி யாத்திரை என்ற நிகழ்வு உண்டு. இவ்வாறு காசியுடனான தமிழகத்தின் பந்தம் நெடுங்காலமாகவே உள்ளது. காசியின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இங்கு, கோவில்கள், ஆசிரமங்கள், பாடசாலைகள் என பலவற்றை தமிழர்கள் நிறுவி உள்ளனர். கவிஞர் பாரதியார், காசியில் பல ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார். இங்கு, கல்லுாரியில் படித்துள்ளார். இங்கு தான் அவர் முறுக்கு மீசை வைத்ததாக கூறுகின்றனர். பனாரஸ் பல்கலை பாரதி இருக்கை ஒன்றை நிறுவி சிறப்பிக்க உள்ளது. நம் நாட்டில், நதிகளின் சங்கமமாக இருந்தாலும் சரி, சமூக, கலாசார, அறிவுபூர்வமான சங்கமங்களாக இருந்தாலும் சரி, இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

வேற்றுமையில் ஒற்றுமை
காசி தமிழ் சங்கமம் என்பது, நம் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் தனித்துவத்தை கொண்டாடுவதாகும். இதற்கு ஈடாக எதையும் குறிப்பிட முடியாது. நாட்டின் கலாசார தலைநகராக காசியும், நாட்டின் பழங்கால பெருமைகளின் தலைநகராக தமிழகமும் விளங்குகின்றன. காசியும், தமிழகமும் சிவமயமானவை, சக்திமயமானவை. ஹிந்து மதத்தில் குறிப்பிடப்படும் முக்தி தரக்கூடிய சப்த புரிகளில் ஒன்றாக, காசியும், காஞ்சியும் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீக தலைவர்கள், பண்டிதர்கள், மேதகு பெரியோர்களின் பங்களிப்பை நாம் மறக்க முடியாது. ராமானுஜரில் இருந்து சங்கராசாரியார் வரை, ராஜாஜியில் இருந்து சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வரை என, அவர்களுடைய கொள்கைகள், கோட்பாடுகளை படிக்காமல், நம் நாட்டின் வரலாறு, பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள முடியாது.
இங்கு விதைக்கப்பட்டுள்ள இந்த விதை, பெரிய மரமாக வளர வேண்டும். தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நம் பாரம்பரியம், கலாசாரத்தை இளையத் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வகை செய்திட வேண்டும். நம்முடைய கலாசாரம், பாரம்பரியம், நம் நாட்டை ஒருங்கிணைக்கும் இழையாகும். ஆனால், இதை இத்தனை காலம் மறக்கடித்து விட்டனர், மறைத்து விட்டனர். நம் நாட்டின் ஒற்றுமையை வலுவாக்க, நம்முடைய கடமைகளை உணர்த்த, இந்த சங்கமத்தில் சங்கமிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பலரும் பங்கேற்றுள்ளதால், பிரதமரின் உரை, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, ஒலிபரப்பப்பட்டது. முன்னதாக, பிரதமர் மோடி தமிழில் அனைவரையும் வரவேற்று, தன் பேச்சை துவக்கினார். மொத்தம்,13 மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி துவங்கும் முன், தமிழகத்தில் இருந்து சென்ற மாணவ, மாணவியரை மோடி சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பிரதமர் மாணவர்களை சந்தித்த போது, வணக்கம் ஐயா என்றார். பதிலுக்கு மாணவர்களும் வணக்கம் தெரிவித்து, ‛பாரத மாதாவுக்கு ஜே; வெற்றிவேல் வீரவேல்' என கோஷமிட்டனர். துவக்க விழாவில், எல்.முருகன், பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை, ராஜ்யசபா உறுப்பினர் இளையராஜா, ஆதினங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.