ஆன்லைன் உணவு டெலிவெரி நிறுவனமான சொமேட்டோ முதலீட்டாளர்களுக்கு லாபம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் செலவைக் குறைக்கும் விதமாக 4 சதவீத பணியாளர்களை வேலையை விட்டு நீக்க முடிவெடுத்துள்ளது.
உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. உலகளவில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியுள்ளன. இந்தியாவில் புதிதாக முளைத்து, முதலீட்டாளர்களின் பணத்தை விளம்பரங்களுக்கு அதிகம் வாரி இறைத்து வளர்ச்சி கண்டது போல காட்டிக்கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது ஆட்டம் காண ஆரம்பித்துள்ளன.
பைஜூஸ், பேடிஎம், சொமேட்டோ, டெல்லிவெரி, கார்டிரேட் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட நிறுவனங்கள், ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டினால், ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் செலவழிக்கின்றன. இதனால் ஒவ்வொரு காலாண்டும் நஷ்டம் கூடிக்கொண்டே போகிறது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த வரை இந்நிறுவனங்களுக்கு வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் நஷ்டம் வர வர பணம் தந்து கொண்டே இருந்தனர். தற்போது அவர்கள் லாபப் பாதைக்கு திரும்பினால் தான் பணம் போடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.
![]()
|
செப்., காலாண்டு முடிவுகள்
செப்டம்பர் உடன் முடிந்த காலாண்டில் சொமேட்டோவின் மார்க்கெட்டிங் செலவு கடந்த ஆண்டைக் காட்டிலும் 23 சதவீதம் குறைந்து, ரூ.300 கோடியாக உள்ளது. டெலிவெரி செலவுகள் 28 சதவீதம் குறைந்து ரூ.283 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 62 சதவீதம் உயர்ந்து ரூ.1,661 கோடியாக உள்ளது. நஷ்டமானது கடந்த ஆண்டின் செப்., காலாண்டில் ரூ.434.9 கோடியாக இருந்தது, இம்முறை ரூ.250.8 கோடியாக சுருங்கியிருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் சொமேட்டோ பங்குகள் சுமார் 7 சதவீதம் சரிந்து ரூ.67.2-க்கு வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.