மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: ஒருவர் ஐந்து மின் இணைப்பு, மூன்று மின் இணைப்பு வைத்திருந்து, ஆதார் எண் இணைக்கப்பட்டால், ஒரு இணைப்பிற்கு தான், 100 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என கூறுவது தவறானது. அனைவருக்கும், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மின் வாரியத்திடம் மின் நுகர்வோரின் விபரங்கள் இல்லை. வாரியத்தின் இழப்பை சரிசெய்ய வேண்டும். அதற்காகவே ஆதார் வாங்கப்படுகிறது. எனவே, ஆதார் இணைப்பு தொடர்பாக, யாரும் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம்.
டவுட் தனபாலு: ஏன் இப்படி மூச்சு வாங்க விளக்கம் தரணும்... பேசாம, 'ஆதார் எண் இணைச்சா, இன்னொரு, 100 யூனிட் ப்ரீ'ன்னு அறிவியுங்க... நாலே நாள்ல, 'டவுட்'டே இல்லாம எல்லாரும் இணைச்சிடுவாங்க... அப்புறமா, நீங்க நிறைவேற்றாத வாக்குறுதி கள் வரிசையில, அதையும் சேர்த்துடுங்க!
விருதுநகர் தொகுதி காங் கிரஸ் எம்.பி., மாணிக் தாகூர்: 'ராஜிவும், அவரது குடும்பத்தினரும் என்ன தியாகம் செய்தனர்?' என, சீமான் கேட்கிறார். நாட்டுக்காக ராஜிவ் என்ன தியாகம் செய்தார் என்பதை மக்கள் அறிவர். ராஜிவ் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த தியாகங்களுக்கு, சீமானின் சான்றிதழ் தேவையில்லை; அதற்கானதகுதியும் அவருக்கு இல்லை.
டவுட் தனபாலு: யாரை, எங்க, எப்ப தட்டுனா, கொதிச்சு எழுவாங்க என்பதை, சீமான் போன்றவங்க நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காங்க... இது தெரியாம, அவரையும் மதிச்சு, பக்கம் பக்கமா அறிக்கை விட்டு, அவருக்கு இலவச விளம்பரம் தந்துட்டு இருக்கீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: அ.தி.மு.க., எக்ஸ்பிரஸ் டில்லி புறப்பட்டு விட்டது. அதில், ஏறுபவர்கள் டில்லி போகலாம். ஏறாதவர்கள் இங்கேயே இருக்கலாம். அ.தி.மு.க., தலைமையை நம்பி கூட்டணிக்கு வந்தால் ஏற்றிக் கொள்வோம். நம்பி வந்தால் கை துாக்கி விடுவோம்.
டவுட் தனபாலு: மறைமுகமா பா.ஜ.,வுக்கு சவால் விடுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது... உங்க எக்ஸ்பிரஸ் என்ன தான் வேகமா கிளம்பினாலும், சிக்னல்கள் கட்டுப்பாடு பா.ஜ., கையில இருக்கு என்பதை, மனசுல வச்சுக்குங்க... நடுக்காட்டுல, 'ரெட் சிக்னல்' போட்டு, ரயிலை நிறுத்திடுவாங்க!
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்: கால்பந்து வீராங்கனை பிரியா
உயிரிழப்பு தொடர்பான மருத்துவ அறிக்கை, காவல் துறையினரிடம்
ஒப்படைக்கப்பட்டது. அதில், ஐந்து பேர் கவனக்குறைவாக இருந்ததாக
தெரிவிக்கப்பட்டு உள்ளது. அலட்சியமாக இருந்தது யாராக இருந்தாலும், அவர்கள்
மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: உங்க
நடவடிக்கை, நயன்தாரா வாடகை தாய் விவகாரத்துல நடந்த மாதிரி, ஒப்புக்கு
சப்பாணியாக இருந்துடக் கூடாது... இனி இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் நடக்காத
வகையில், மற்றவங்களுக்கு பாடமாக இருக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
முன்னாள்
முதல்வர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க., சார்பாக விரைவில், மாவட்ட செயலர்கள்
கூட்டம் நடக்க உள்ளது. அது முடிந்த பின், பொதுக்குழு கூட்டம் நடக்கும்.
அனைத்து நிர்வாகிகளையும் அறிவித்ததும், அனைத்து மாவட்டங்களுக்கும்
சுற்றுப்பயணம் செல்வேன்.
டவுட் தனபாலு: 'அப்புறம் தேர்தல் வரும்...
அதுல ஜெயிச்சு முதல்வர் ஆவேன்'னு வரிசையா சொல்லிட்டே போக வேண்டியது
தானே... கட்சிக்கு யார் தலைமை என்ற வழக்குல இன்னும் இறுதி முடிவு தெரியாத
சூழல்ல, அவசர குடுக்கையா செயல்படணுமா என்ற, 'டவுட்' எழுதே!
தமிழக
காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி: ராஜிவ் படுகொலை வழக்கில், நளினி உள்ளிட்ட
ஆறு பேரின் விடுதலை தொடர்பாக, மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல்
செய்திருப்பதை வரவேற்கிறோம்; முன்கூட்டியே அவர்களின் விடுதலை நடவடிக்கையை,
மத்திய அரசு தடுத்திருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: 'ராஜிவ்
கொலையாளிகள் விடுதலையை ஏத்துக்க முடியாது' என, குதியா குதிக்கிறீங்களே...
ஆனா, ராஜிவ் இறப்பால, தனிப்பட்ட முறையில பாதிக்கப்பட்ட சோனியா, ராகுல்,
பிரியங்கா என யாருமே, இவங்க விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன்
என்ற, 'டவுட்' உங்களுக்கு வரவில்லையா?