சமையல் கட்டுக்குள் அடங்கிக் கிடந்த பெண்கள் இன்று தொழில், வேலைகள், பதவிகளில் உச்சம் தொட்டுள்ளனர். அந்த வகையில் தொழில்நுட்பம் பெருகிவிட்ட இக்காலத்தில் புதிய அமைப்புகளை தொடங்கி தொழில், சேவையை விரிவுபடுத்துவது, அதற்கு உதவுவது என பெண்கள் மேம்பாட்டுக்கு தமிழக பெண்கள் களம் காணத் துவங்கிவிட்டனர்.
அந்த வகையில் மதுரையில் 'SEA' (She Entrepreneur Association) என்ற அமைப்பு செப்.17 ல் துவங்கப்பட்டு, சாதாரண நிலையில் உள்ள பெண் தொழில் முனைவோரை அடையாளம் கண்டு கைதுாக்கி விடுகிறது.
மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்த சுமதி இதன் சேர்மன். தலைவராக அபிநயா, செயலாளராக தர்ஷனா, பொருளாளராக சரவணா, துணைத்தலைவி சுஜிதா உட்பட 70க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் கைவினைப்பொருள், சமையல் உணவுப்பொருள், சணல்பைகள், ரெடிமேடு துணிமணிகள், நவதானிய பொருட்கள், அலங்கார பொருட்கள், இயற்கை விவசாயம் என எல்லாவித உற்பத்தியிலும் செயல்பட்டு வருகின்றனர். பெண்கள் மேம்பாட்டுக்கு என ஒற்றுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர்.
ஒருவரது தயாரிப்பு விற்பனையாகாமல் தேங்கினால் அவற்றை இந்த அமைப்பினரே மார்க்கெட்டிங் செய்து விற்க உதவுகின்றனர். இதற்காக விற்பனை கண்காட்சி நடத்தி உதவுகின்றனர். தயாரிப்புகளை சந்தைப்படுத்த பள்ளி, கல்லுாரி, மண்டபங்களில் இடம் கேட்டு கலெக்டர் அளவில் மனுகொடுத்துள்ளனர்.
நிர்வாகிகள் கூறுகையில், 'இடம் தரும் பள்ளிகளில் விடுமுறை நாட்களில் கண்காட்சி நடத்துவோம். கைமாறாக பள்ளிகளை துாய்மைப்படுத்தி, பராமரிப்பு செய்து உதவுவோம்' என்றார்.
சென்னை, புதுச்சேரி, திருச்சி, கோவை, பழநியிலும் கிளைகள் உருவாக்கி பெண்கள் மேம்பாட்டுக்கு உதவுகின்றனர்.
தற்போது இவர்கள் யாரும் செய்யாத வகையில் மகளிருக்கென முறையான வங்கியை துவங்கியுள்ளனர். சேர்மன் சுமதி கூறுகையில், ''ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் பெரிய அளவில் வங்கி துவங்க விதிமுறைகள் ஒத்துவரவில்லை. இதனால் சிறிய அளவிலான வங்கியாக அரசு அனுமதிக்கும் நியாயமான வட்டி வீதத்துடன் குறைந்த அளவில் பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் வகையில் 'காரிய ரூபிணி' மகளிர் வங்கி துவக்கியுள்ளோம். இதனால் பெண்கள் மேம்பாட்டை எளிதாக அடைய முடியும்'' என்றார்.
சிறுசிறு தொழில் செய்வோர், புதிதாக துவக்கவிரும்புவோர் இவர்களை 98422 34035ல் தொடர்பு கொள்ளலாம்.