வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய அரசு அறிவித்த, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை காங்கிரஸ் உடனே வரவேற்றது. 'இந்த திட்டத்தை முதலில் கொண்டு வர முயற்சித்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தான்' என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, 'அந்த சமயத்தில் மன்மோகன் சிங் அரசில் தி.மு.க.,வும் இருந்தது. அப்போது அக்கட்சி ஏன் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை' என புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது.
ஆனால், காங்., கூட்டணியில் உள்ள தி.மு.க., இந்த இட ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்ததும், காங்., மூத்த தலைவர் சிதம்பரம், ஜெய்ராமிற்கு போன் செய்து அடக்கி வாசியுங்கள் என்றார்; காங்கிரசும் இந்த விஷயத்தை அடக்கி வாசித்தது.

'தி.மு.க., தந்த இந்த நெருக்கடியால், இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்., பின்வாங்கியிருப்பது, வட மாநிலங்களில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்' என்கின்றனர், வட மாநில காங்கிரஸ் தலைவர்கள்.
இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டால், ஜாட், மராட்டியர் மற்றும் கர்நாடகத்தில் உள்ள லிங்காயத் இனத்தவர் பயனடைவர். தற்போது காங்கிரஸ் எடுத்துள்ள மாறுபட்ட நிலையால், இவர்களின் ஓட்டுகள் கிடைக்காது என வருத்தப்படுகின்றனர் காங்., தலைவர்கள்.