சென்னை: நிதி அமைச்சர் தியாகராஜன் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் 'அரசு பொறுப்பேற்றது முதல் கூட்டுறவு துறையில் நடந்த முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகள்' என கூட்டுறவுத் துறை சார்பில் 76 பக்க செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு வங்கிகளும் கூட்டுறவு சங்கங்களும் செயல்படுகின்றன. இந்த சங்கங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. மேலும் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் நகைக் கடன் வழங்குவதுடன் வேளாண் இடுபொருட்களையும் விற்பனை செய்கின்றன.
'கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை. அங்கு பல தவறுகள் நடக்கின்றன' என நிதி துறை அமைச்சர் தியாகராஜன் கருத்து தெரிவித்தார். கோபம் அடைந்த கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி 'எங்கள் துறை மக்களுக்கானது; ரேஷன் கடைகளை பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடைய வேண்டிய அவசியம் இல்லை' என்றார்.
![]()
|
இது இரு அமைச்சர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலை வெளிப்படுத்தியது.
இந்நிலையில் அரசு பொறுப்பேற்ற 2021 மே 7ம் தேதி முதல் தற்போது வரை கூட்டுறவு துறையில் நடந்துள்ள முன்னேற்றம் சாதனைகள் குறித்த பத்திரிக்கை செய்தியை கூட்டுறவு துறை நேற்று வெளியிட்டுள்ளது.
மொத்தம் 76 பக்கங்கள் உள்ள செய்திக் குறிப்பில் 2021 - 22 பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட 27 மொத்த அறிவிப்புகளில் 26 நிறைவேற்றப் பட்டதாகவும் நடப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட 25 மொத்த அறிவிப்புகளில் அனைத்திற்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.