பெங்களூரு-''தாய் மொழியின் பலத்தினால், வளர்ச்சியடைய வேண்டும். தாய் மொழி கல்வி பற்றி தாழ்மையாக நினைக்க வேண்டாம்,'' என கவர்னர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார்.
ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, பீஹார் மாநிலங்களில் இருந்து, கர்நாடகாவுக்கு வருகை தந்த பழங்குடியின இளைஞர் குழுவை வரவேற்க, பெங்களூரின் யவனிகா ஆடிட்டோரியத்தில், நேற்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியை துவங்கி வைத்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:
ஜப்பான், சீனா, ஜெர்மனி, ரஷ்யா உட்பட, பல நாடுகளில் ஆங்கில வழி கல்வி இல்லை. அந்த நாடுகள் தாய் மொழி கல்வி வழியாகவே, உலகின் பிரபல நாடுகளாக வளர்ந்துள்ளன. ஆங்கில மொழியால் மட்டுமே, வளர்ச்சி அடைய முடியும் என்ற மனப்போக்கு சரியல்ல.
தாய் மொழியின் பலத்தினால், வளர்ச்சியடைய வேண்டும். தாய் மொழி கல்வி பற்றி தாழ்மையாக நினைக்க வேண்டாம்.
நாட்டில் பல மொழிகள், கலாச்சாரம் உள்ளன. நாட்டில் அனைத்து சமுதாயங்களும், வளர்ச்சியடைய வேண்டும். 75 ஆண்டுகள் நீண்ட முயற்சியால், நாடு பெருமளவில் வளர்ந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல், வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பெங்களூரு வளர்ச்சியில், நாட்டிலேயே முன்னணியில் உள்ள நகராகும். கர்நாடகாவும் கூட, பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இங்குள்ள மடங்கள், ஆன்மிக அமைப்புகள் இலவசமாக கல்வி அளிக்கின்றன. இது போன்று, மற்ற மாநிலங்களிலும், நடக்க வேண்டும். பொருளாதாரம், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய, கல்வியையே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.