தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்: இளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணியர் நலனில் அக்கறை செலுத்தாமல் தவிர்த்தால், அது நம் எதிர்காலத்தை சிதைத்து விடும். மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகம் உள்ளன. முதன்மை மருத்துவம் மட்டுமின்றி, அடுத்த கட்ட மருத்துவ கட்டமைப்பும், தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
டவுட் தனபாலு: 'மூட்டு ஜவ்வு கிழிந்திருக்கிறது' என, அரசு மருத்துவமனைக்கு நடந்து சென்ற, கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு, இறந்தே போயிட்டாரே... இது தான் முன்னோடி மாநிலத்துக்கு அடையாளமா என்ற, 'டவுட்' எழுதே!
எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க.,வின் பழனிசாமி: அசைவ பிரியர்களுக்கு, ஆடு, கோழி வெட்டப்படுவது போல, மனிதர்கள் வெட்டி படு கொலை செய்யப்படுவது, தி.மு.க., ஆட்சியில் தொடர் கதையாகி வருகிறது. சாலையில் செல்லும், யாருடைய உயிருக்கும் பாதுகாப்பில்லை. தி.மு.க., ஆட்சியில், போதைப் பொருட்கள் விற்போர், சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்படுகின்றனர். தி.மு.க., அரசு சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்க்கிறது.
டவுட் தனபாலு: 'துாத்துக்குடி துப்பாக்கி சூட்டில், ௧௩ பேர் பலியானது, யார் ஆட்சியில் நடந்துச்சு... 'குட்கா' ஊழல் யார் முதல்வராக இருந்தபோது நடந்துச்சு' என, தி.மு.க., தரப்பு திருப்பி கேட்டால், 'டவுட்' இல்லாம பழனிசாமியால் பதில் சொல்ல முடியுமா?
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி: கூட்டுறவுத் துறை மிக சிறப்பாக செயல்படுகிறது; அரிசி தரமாக வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவு, ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்பட்டு, 13 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில், இருப்பிடத்துக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் பொருட்கள் வழங்குவதில், இந்தியாவில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.
டவுட் தனபாலு: 'கூட்டுறவுத் துறை செயல்பாடு திருப்தியில்லை' என, நிதி அமைச்சரும்; 'கூட்டுறவு துறையில் முறைகேடு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வனத்துறை அமைச்சரும்; 'கூட்டுறவு சங்க தலைவர்கள் இணைந்தால் நாட்டையே கொள்ளையடித்து விடுவர்' என, நீர்வளத் துறை அமைச்சரும் தெரிவித்தனரே... இப்படி சக அமைச்சர்களே, கூட்டுறவு துறையை போட்டுத் தாக்குறாங்களே... அது ஏன் என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்களேன்!