உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம் ............
ஆர்.சேஷாத்ரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்:
பழைய பொம்மைகளை வைத்து விளையாடும் குழந்தைகளிடம், யாராவது புது பொம்மையை கொடுத்தால், பழையதை துார வீசி, புது பொம்மையை வைத்து விளையாடுவர்.
அதே மாதிரி, நம் வீட்டு பெண் குழந்தைகளும், உள்ளூர் பழைய தோழியருடன் விளையாடியபடி இருப்பர். திடீரென ஏதாவது ஒரு வெளியூர் புதுபெண் அங்கு வந்தால், உள்ளூர் தோழியரை ஒதுக்கி விட்டு, புதிய தோழியோடு விளையாட ஆரம்பித்து விடுவர். இது, நம் பெண் குழந்தைகளுக்கு உள்ள பழக்கம்

.
அதே மாதிரி இப்போது திருமாவளவன், ஈழப் போராட்டம், கச்சத்தீவு மீட்பு, 'நீட்' தேர்வு, சனாதன தர்மம், பஞ்சமி நிலம் மீட்பு, ஹிந்தி எதிர்ப்பு, ஒன்றிய அரசு எதிர்ப்பு, தமிழ் அர்ச்சனை போன்ற விளையாட்டுகளை ஒதுக்கி வைத்து விட்டு, புது விளையாட்டை விளையாட ஆரம்பித்து இருக்கிறார். அதுதான், மனுஸ்மிருதி புத்தக வினியோகம். பிற மதங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் மத நோட்டீசை பஸ் ஸ்டாண்டில், கடைத் தெருக்களில் வினியோகித்து, அவை பொது இடங்களில் காலில் மிதிபடுவது போதாதா! அதுபோன்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளார் திருமா.
மனுஸ்மிருதி புத்தகம், யாரால் எங்கே ஏன் எந்த மொழியில், எப்போது எழுதப்பட்டது என்றே தெரியாது. அதுமொழி பெயர்க்கப்பட்ட ஒரு நுால். அதுவும், பிற மதத்தவர் ஒருவரால் வேண்டுமென்றே மிகைப்படுத்தி எழுதப்பட்டது. அவரது இஷ்டத்துக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட ஒரு 'டப்பிங்' நுால். சரி... அந்த நுாலில் உள்ளது உண்மை என்றாலும், அதை இப்போது, யார் நடைமுறைக்கு கொண்டு வந்து அரசு நடத்துகின்றனர். பலர் அந்த நுாலை பார்த்ததும் இல்லை; படித்ததும் இல்லை.
திருமா கொடுப்பது தான் கொடுக்கிறார்... ஏன் ஒரு லட்சம் புத்தகம் கொடுக்க வேண்டும்; ஒரு கோடி கொடுக்க வேண்டியது தானே?
![]() |
ஒரு கோடி புத்தகம் அச்சிட்டால், அந்த புத்தக வெளியீட்டாளராவது பிழைத்து கொள்வார். இப்போது, இந்த புத்தகத்தை யார் வாங்குவர்... அப்படியே வாங்கினாலும் படிப்பரா... அப்படியே படித்தாலும் மனம் மாறுவரா... மனம் மாறினாலும் புத்த மதத்துக்கு போவரா? ஒன்றும் நடக்கப் போவது இல்லை.
திருமாவுக்கு ஏதாவது செய்து, தன் புகழை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ஆசை. அதனால், மனுஸ்மிருதி விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். இது, அவரின் சீசன் விளையாட்டு. இந்த விளையாட்டு முடிந்தவுடன் அடுத்த விளையாட்டுக்கு சென்று விடுவார். பாவம்... குழந்தை புத்தி அவருக்கு!