சென்னை : ஒருங்கிணைந்த சான்று கோரிய, டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா குடும்பத்தினரின் மனு மீது, உடனடியாக முடிவு எடுத்து, அறிக்கை அளிக்க வேண்டும் என, வருவாய் துறை அதிகாரிகளுக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு பகுதியில், 2015ல் கோகுல் ராஜ் என்பவர் மர்மமான முறையில் இறந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா, திருசெங்கோடு முகாம் அலுவலகத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார்.
இதற்கு, கோகுல்ராஜ் இறப்பு வழக்கில் ஏற்பட்ட நெருக்கடியே காரணம் என்று புகார் எழுந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. விஷ்ணுபிரியா இறப்பு தற்கொலை தான் என, வழக்கை சி.பி.ஐ., முடித்துவைத்தது.
இந்நிலையில், விஷ்ணுபிரியாவின் சகோதரி திவ்யாவுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க, அவரது குடும்பத்தினர் முதல்வர் அலுவலகத்துக்கு மனு அனுப்பினர்.
இதற்கு, அரசு ஒப்புதல் அளித்த நிலையில், உரிய சான்றுகளை அளிக்க விஷ்ணுபிரியா குடும்பத்தினர் அறிவுறுத்தப் பட்டனர்.
இதற்காக, வாரிசு, குடும்ப சொத்து, வருவாய் ஆகிய விபரங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த சான்று கோரி, திவ்யா கடலுார் வடக்கு தாலுகா அலுவலகத்தில், 2021 பிப்., 19ல் விண்ணப்பித்தார்.
இந்த மனுமீது, வருவாய் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது தொடர்பான விபரங்கள் கேட்டு, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
மனுதாரர் சார்பில், சென்னை பெரம்பூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் கல்யாணசுந்தரம் ஆஜராகி வாதிட்டார்.
இதில், மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான, பொது தகவல் அலுவலர்,ஒருங்கிணைந்த சான்று வழங்குவது குறித்து, கலெக்டரிடம் அறிவுரை கோரப்பட்டு உள்ளது. இதில், விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து ஏழு நாட்களுக்குள், ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்க சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை இந்த ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.