சென்னை: சமூக வலைதளங்களில் யூடியூபர் கிஷோர் கே சாமி மழை வெள்ளத்தில் முதல்வர் ஸ்டாலினின் பணிகளை விமர்சிக்கும் வகையில் கடந்த நவம்பர் 1ம் தேதி அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர போலீசின் சைபர் கிரைம் பிரிவு போலீசார், கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பியது. நவ.,5, 7, 9 மற்றும் 14ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி பல நோட்டீஸ்கள் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இதற்கிடையே முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிஷோர் கே சாமி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி அல்லி, விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பிய நோட்டீசுக்கு ஆஜராகாததால் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த கிஷோர் கே.சாமியை போலீசார் கைது செய்தனர்.