சென்னை: நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் வெளியாவதை தமிழகத்தின் 'அரசியல் வாரிசு' விரும்பவில்லை என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
விஜய் தனது படத்திற்கு 'வாரிசு' என பெயர் வைத்தது தான் வில்லங்கமே. ஏனென்றால் வாரிசு என்றால் எதை அவர் குறிப்பிடுகிறார்? இந்த தலைப்பு அரசியல் விமர்சகர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரும் 'தலைகள்' இல்லாத தமிழக அரசியலில் எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்கப்போகும் அடுத்த நடிகர் நான் தான் என்பதை சொல்லாமல் சொல்கிறாரா? அரசியலில் அதிகாரத்தை கைப்பற்றும் அளவிற்கு செல்வாக்கு பெற்ற வேறு வாரிசு யாரும் இல்லை என்பதை குறிப்பிடுகிறாரா?
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு சினிமாவில் இருந்து வந்து முதல்வர் நாற்காலியில் அமரும் தகுதி தனக்கு மட்டுமே உள்ளது என்று, கூறாமல் கூறுகிறாரா? என்றெல்லாம் சந்தேகங்களை அரசியல் விமர்சகர்கள் கிளப்புகிறார்கள்.

இதை உண்மையான அரசியல் வாரிசும் உணாராமல் இருப்பாரா என்ன! ''வாரிசு என்றாலே நாம் தானே.. இவர் (நடிகர் விஜய்) எதற்கு தேவையில்லாமல் வாரிசு என்று தனது படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்? இதன்மூலம் வேண்டுமென்றே தனது ரசிகர்களை அவர் உசுப்பேற்றுகிறார்.
படத்தை ஓட வைப்பதற்காகவும், தலைப்பில் அரசியல் நெடி அடிக்க வேண்டும் என்பதற்காகவும் விஜய் இந்த குசும்பு வேலையை செய்திருப்பதாகவும் அரசியல் வாரிசு நினைக்கிறாராம்.
இதை நிரூபிப்பது போல் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தியதுடன், அவர்களுக்கு பிரியாணி விருந்தும் வைத்துள்ளார் விஜய்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதே குசும்பு தனத்தை விஜய் செய்தார். அப்போது வெளியான ஒரு படத்திற்கு 'தலைவா' என்று பெயர் வைத்ததுடன், தலைப்புடன் தலைமை ஏற்கும் நேரம் என குறிப்பிடம் வகையில் 'டைம் டு லீட்' எனவும் குறிப்பிட்டிருந்தனர். இதனால் அதுவரை 'சைலன்ட் சிங்கமாக' இருந்த ஜெயலலிதாவை சீண்டிவிட்டார். தலைவி என தான் மட்டும் இருக்கும் ஒரு இடத்தில் 'தலைவா' எப்படி இருக்க முடியும் என்று கர்ஜித்தார்.
அந்த பெண் சிங்கத்தின் கோபத்தின் முன்னே தன்னை படங்களில் ஆண் சிங்கமாக காட்டும் விஜய்யால் ஒன்றும் செய்ய முடியவில்லை. படம் ரிலீஸ் ஆகாமல் பெட்டிக்குள்ளேயே முடக்கப்பட்டது.

படம் தயாரிக்க போட்ட பல கோடி ரூபாய் முதலீடு கிணற்றில் போட்டக் கல்லாக மாறியது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களின் நெருக்கடியால் வேறு வழியே இல்லாமல் ஜெயலலிதாவை சந்தித்து காலில் விழாத குறையாக 'டைம் டு லீட்' வாசகத்தை நீக்கி படத்தை ரிலீஸ் செய்தார். இப்போது திமுக அரசை சீண்டிப்பார்க்கிறார் விஜய்.
தமிழக வரைபடம்:
இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை பெற்ற 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், தமிழக வரைபடம் முழுவதும் நடிகர் விஜய் நிரம்பியிருப்பது போன்ற காட்சியை சித்தரித்திருந்தனர்.
இதற்கு என்ன அர்த்தம்? தமிழகத்தில் வாரிசு படத்தை நாங்கள் ரிலீஸ் செய்கிறோம் என்பதை தான் வரைபடம் மூலம் குறிப்பிடுகிறோம் என்று விநியோக நிறுவனம் கூறிக்கொண்டாலும், 'தமிழகத்தை' விஜய் தான் ஆளப்போகிறார் என்பதை மறைமுகமாக சொல்கின்றனர்'' என்றும் அரசியல் வாரிசு நினைக்கிறாராம்.

இதனாலேயே பெரிய நடிகர்களின் படங்களை எல்லாம் போட்டிப்போட்டு விநியோகிக்கும் அவர், வாரிசு படத்தை வாங்க விரும்பவில்லையாம். இப்போதே கண்ணைக்கட்டுதே.. பொங்கலின்போது படத்தை ரிலீஸ் செய்ய என்ன பாடுபட வேண்டியிருக்குமோ என்று வாரிசு படத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் புலம்புகின்றனராம்.