பெங்களூரு: அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணி 50 ஓவர்களில் 506 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. தமிழக வீரர் ஜெகதீசன் 277 ரன்கள் குவித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அடுத்து பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 435 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இமாலய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் 'லிஸ்ட் ஏ', விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடந்த 'குரூப் சி' போட்டியில் தமிழகம், அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதின.
இதில் 'டாஸ்' வென்ற அருணாச்சல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தமிழக அணிக்கு நாராயணன் ஜெகதீசன், சாய் சுதர்சன் மீண்டும் நல்ல துவக்கம் தந்தனர். இருவரும் அருணாச்சல் அணியின் பந்துவீச்சை விளாசினர். 76 பந்துகளில் ஜெகதீசன் சதம் விளாசி, முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 சதம் அடித்து சாதனை படைத்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பவுலர்கள் திணறினர். 38.3வது ஓவரில் ஒருவழியாக சாய் சுதர்சன் 154 ரன்களில் (19 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டானார். அப்போது தமிழக அணியின் ஸ்கோர் 416 ஆக இருந்தது. அதிரடி காட்டிய ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 277 ரன்களில் கேட்சானார். 50 ஓவர்கள் முடிவில் தமிழக அணி 2 விக்., இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. பாபா அபராஜித், பாபா இந்திரஜித் சகோதரர்கள் தலா 31 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி, 28.4 ஓவர்களில் 71 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அந்த அணியில் 3 வீரர்களை தவிர அனைவரும் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நான்கு பேர் 'டக் அவுட்' ஆகியுள்ளனர். தமிழக வீரர் சித்தார்த் 5 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 435 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி இமாலய வெற்றிப்பெற்றது.
ஜெகதீசன் சாதனை:
* சமீபத்தில் சென்னை ஐ.பி.எல் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெகதீசன் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
* விஜய் ஹசாரே தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் அவர் வசம் சென்றுள்ளது. முன்னதாக சவுராஷ்டிரா அணி வீரர் வியாஸ் 200 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
* பவுண்டரிகள் மூலமாக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலிலும் ஜெகதீசன் முன்னிலை வகிக்கிறார். 25 பவுண்டரி, 15 சிக்சர்கள் மூலமாக மட்டும் அவர் 190 ரன்கள் சேர்த்துள்ளார்.
* விஜய் ஹசாரே தொடரில் எந்தவொரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் பட்டியலில் ஜெகதீசன், சுதர்சன் ஜோடி முதலிடத்தில் உள்ளது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்துள்ளது.

* முதல்தர கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தனிநபர் அதிகபட்ச ரன்கள் சாதனையையும் தன்வசப்படுத்தினார் ஜெகதீசன். இங்கிலாந்தின் சர்ரே அணி வீரர் அலிஸ்டர் பிரவுன் 2002ல் எடுத்த 268 ரன்கள் என்ற சாதனையை இன்று தகர்த்தார் ஜெகதீசன்.
முதலிடத்தில் தமிழக அணி
* விஜய் ஹசாரே தொடரில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்னாக தமிழக அணியின் 506 ரன்கள் பதிவானது. 2வது இடத்தில் இன்று ராஞ்சியில் நடந்த போட்டியில் பெங்கால் அணியின் 426 ரன்கள் உள்ளது.
* இப்போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தமிழக அணி, முதல்தர போட்டிகளில் ரன்கள் அடிப்படையில் அதிக ரன் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி என்னும் இமாலய சாதனை படைத்துள்ளது.