திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கான்ட்ராக்டர் ஒருவர் கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு குழாய் அமைக்கும் பணியில் 'செட்அப்' குழாய்களை மட்டும் அமைத்துவிட்டு இணைப்பே கொடுக்காமல் சென்றுள்ளார். ரூ.3.69 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த 'செட்அப்' குழாயில் காற்று கூட வருவதில்லை என அக்கிராமத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், இந்திரவனம் கிராமத்தில் வீட்டுக்கு வீடு குழாய் அமைக்கும் பணிகள் நடந்துள்ளன. இதில் கான்ட்ராக்டர் பெயரளவிற்கு மட்டும் குழாய் அமைத்துவிட்டு சென்றுவிட்டதாக அக்கிராமத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிலும், இக்குழாய் அமைத்ததற்காக வரி போட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், கான்ட்ராக்டர் குழாய் போன்ற 'செட்அப்' மட்டுமே செய்துவிட்டு சென்றுவிட்டதாக வீடியோ வைரலாகியுள்ளது.

அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 'செட்அப்' குழாயை கையால் பிடித்து இழுத்ததும் அப்டியே வெளிவருகிறது. மண்ணில் சிறிதளவு புதைத்து விட்டு, கீழே குழாய்களை இணைக்காமல் போட்டுவிட்டு சென்றுள்ளார் கான்ட்ராக்டர்.
இதனால் குடிநீர் குழாயில் காற்றுக்கூட வருவதில்லை. இது தொடர்பாக அந்த இளைஞர் கூறுகையில், '3 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழாயில் காற்று கூட வருவதில்லை. ஆனால் ரூ.10 ஆயிரம் கூட செலவாகிருக்காது. எங்களின் வரிப்பணம் இப்படி போகிறது' என வேதனையுடன் தெரிவித்தார்.