தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா: தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக, பிரிவனைவாத தீயசக்தியாக விளங்கும் திருமாவளவன், 'தனி தமிழ்நாடு' என பேசுகிறார். இதனால், முதல்வர் ஸ்டாலின் உடனே திருமாவளவனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தன் ஆட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையை அவர் சந்திக்க நேரிடும்.
டவுட் தனபாலு: கூட்டணி பார்ட்னரான திருமா மீது ஸ்டாலின் எப்படி நடவடிக்கை எடுப்பார்...? நீங்க வேண்டும் என்றால், டில்லியில பேசி, தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக அடிக்கடி பேசும் திருமாவளவனின் எம்.பி., பதவியை பறிக்க நடவடிக்கை எடுத்தால் என்ன என்பது தான் எங்க, 'டவுட்!'
மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளில், 2.20 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால், தற்போது ஒன்றரை ஆண்டில், 1.50 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த, 100 நாட்களுக்குள், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.
டவுட் தனபாலு: நிஜமான விவசாயிகளுக்கு துரிதமா இலவச மின்சாரம் தருவது, 'டவுட்'டே இல்லாம வரவேற்கப்பட வேண்டியது தான்... அதே நேரம், விவசாயிகள் போர்வையில, ஆளுங்கட்சியின் வட்ட, குட்ட செயலர் களுக்கு அரசு சலுகையை வாரி விட்டுடக் கூடாது!
ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்: டில்லியில் ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய, சிலர் முயற்சிக்கின்றனர். நான் உயிருடன் இருக்கும் வரை, அது நடக்கவே நடக்காது.
டவுட் தனபாலு: மின்சாரம், அரிசி, 'டிவி' மிக்சி, கிரைண்டர்னு மக்களை உழைக்க விடாமல் சோம்பேறிகளாக்கும் வித்தையை, எங்க ஊர் அரசியல் தலைவர்களிடம் இருந்து கத்துக்கிட்டு, வடமாநிலங்கள்ல உங்க அரசியல் வண்டியை நல்லாவே ஓட்டுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!