கோவை : தன் மனு மீது மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காததால், கோவை கலெக்டருக்கு நேற்று, 'அல்வா' கொடுக்க வந்த தி.மு.க., பிரமுகரை போலீசார் தடுத்தனர்.
பொதுமக்களிடம் குறை கேட்கும் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சமீரன் மனுக்களை பெற்று, துறை அலுவலர்களுக்கு பரிந்துரைத்துக் கொண்டிருந்தார்.
கோவை மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும், வேடப்பட்டி, சத்யா நகரைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் ஜெகநாதன், கட்சி துண்டை அணிந்து வந்திருந்தார்.
அவர், கலெக்டரிடம் கொடுக்க மனுவுடன், அல்வா பார்சல் கொண்டு வந்திருந்தார். நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
ஜெகநாதன் கூறுகையில், ''கடந்த, 2019ல், 12 ஆடுகளை அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் விஷம் வைத்து கொன்றனர்.
''வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனக்கு அல்வா கொடுத்து வருவோருக்கு, அல்வா கொடுக்க வந்தேன்,'' என்றார்.
போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு அல்வாவை பிரித்துக் கொடுத்துவிட்டு, கலெக்டரிடம் மனு மட்டும் கொடுத்தார்.