திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி மேலாளர் உட்பட 13 பேர் மீது டவுன் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திண்டிவனம் மயிலம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 19ம் தேதி வரி வசூல் செய்ய சென்ற நகராட்சி ஊழியர்களுக்கும், மண்டப உரிமையாளர் மூர்த்தி, அவரது சகோதரர் வழக்கறிஞர் சங்கரன் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நகராட்சி அலுவலகத்திற்கு வழக்கறிஞர் சங்கரன் தலைமையில் வந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பேரில், சொத்து வரி வசூல் செய்ய சென்ற நகராட்சி ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த மூர்த்தி, சங்கரன் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நகராட்சி மேலாளர் சந்திரா கொடுத்துள்ள புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இதே பிரச்னை குறித்து, திண்டிவனம் டவுன் போலீசில், வழக்கறிஞர் சங்கரன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், வரி பாக்கி வசூல் செய்வது தொடர்பாக, நகராட்சி மேலாளர் சந்திரா துாண்டுதலின் பேரில் 12 பேர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.