புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் மதுரா அருகே சூட்கேஸில் இளம்பெண் உடல் கிடந்த வழக்கில், அந்தப் பெண்ணின் தந்தையே கொலை செய்ததும், சூட்கேஸில் உடலை அடைக்க தாய் உதவி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் யமுனா விரைவுச் சாலையில், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் அருகே சாலை ஓரத்தில் கடந்த வாரம் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. போலீசார் அதை திறந்து பார்த்த போது, அதற்குள் இளம்பெண் உடல் இருந்தது.
இதுகுறித்து, மதுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அந்தப் பெண்ணின் படத்தை போஸ்டர் அடித்து ஒட்டினர். சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர்.
அதைப் பார்த்ததும், புதுடில்லி யில் வசிக்கும் அந்தப் பெண்ணின் தந்தை நித்தேஷ் யாதவ், உடலை அடையாளம் காண வந்தார்.
அப்போது அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசர் கூறியதாவது: கொலையான ஆயுஷி, 22, வேறு ஜாதியை சேர்ந்த சத்ரபால் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் மகள் மீது ஆத்திரம் அடைந்த நித்தேஷ், மகள் என்றும் கூட பார்க்காமல் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.
மகள் உடலை சூட்கேசுக்குள் திணிக்க, அவரது தாயும் உதவி செய்துள்ளார். பின், அந்த சூட்கேசை யமுனா விரைவுச் சாலையின் ஓரம் வீசி விட்டு சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. நித்தேஷிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.