உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக கவர்னரை நீக்க வேண்டும்' எனக்கோரி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், சமீபத்தில் ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்களை சந்திக்க நேரம் ஒதுக்காததால், மனுவானது அவரது அலுவலகத்தில், எம்.பி., ஒருவரின் உதவியாளர் வாயிலாக சமர்ப்பிக்கப்பட்டது; மனுவில் யாருடைய கையெழுத்தும் இல்லை.
ஆனால், ஆளுங்கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிக்கும், கூட்டணி கட்சியினர் ஒன்று சேர்ந்து வீராவேசமாக பேட்டி கொடுத்தனர்... அப்போது, 'கவர்னர் ரவி, மதம் சார்ந்து செயல்படுகிறார். இந்தியா மதச்சார்பற்ற நாடு; தமிழகம் அமைதி பூங்கா. கவர்னர் சனாதன தர்மம் பேசுகிறார். மற்ற மதத்தவருக்கு எதிராக செயல்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, அவர் கேள்வி கேட்க முடியாது; அரசுக்கு உத்தரவிட முடியாது. அவரை திரும்ப பெற வேண்டும்' என்றெல்லாம் கூறினர்.

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று அவர்கள் சொன்ன போது, சிரிப்பை அடக்க முடியவில்லை. சமீபத்தில் தான், கோவையில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதற்கு முன், ஒரு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில், ரவுடிகள் உள்ளே நுழைந்து, ஒரு பள்ளியையே சின்னா பின்னமாக்கி, அங்கிருந்த உடமைகளை அள்ளிச் சென்றனர். இப்படி, பல நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பின் எப்படி தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்று சொல்கின்றனர் என்று, தெரியவில்லை. 'தி.மு.க., அரசு மதசார்பற்ற அரசு' என்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், ஹிந்து மதத்திற்கு எதிராக யார் எந்த தவறான, குதர்க்கமான கருத்துகளை சொன்னாலும், மோசமாக விமர்சித்தாலும், அவர்களை கண்டு கொள்வதில்லை. குறிப்பிட்ட மதங்களை மட்டுமே பாதுகாக்கும் அரசு எப்படி மதசார்பற்ற அரசாகும்?
கவர்னரை நீக்க கோரி, ஜனாதிபதியிடம் நேரடியாக மனுக்கொடுக்க துப்பில்லாத, தி.மு.க.,வினரும், அதன் கூட்டணி கட்சியினரும், வெட்கப்படாமல் வாய்கிழிய பேசுவது, தமிழர்களாகிய நமக்குத் தான் கேவலமாக உள்ளது. கழக ஆட்சியாளர்களும், ஒன்றிரண்டு, 'சீட்'களுக்காக, அவர்களுக்கு வெண்சாமரம் வீசுபவர்களும், என்ன தான் கூப்பாடு போட்டாலும், கவர்னர் ரவியை நீக்க முடியாது; அவர் பதவியில் தொடரவே செய்வார் என்பதில் சந்தேகமில்லை.