வீட்டின் முன் மண்ணெண்ணெய் பாட்டில் வீசி நாடகமாடிய ஹிந்து முன்னணி பிரமுகர் கைது | Dinamalar

வீட்டின் முன் மண்ணெண்ணெய் பாட்டில் வீசி நாடகமாடிய ஹிந்து முன்னணி பிரமுகர் கைது

Updated : நவ 22, 2022 | Added : நவ 22, 2022 | கருத்துகள் (33) | |
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், ஹிந்து முன்னணி பிரமுகர் ஒருவர், தன் வீட்டின் முன், தானே மண்ணெண்ணெய் பாட்டில் வீசிவிட்டு, மர்ம நபர்கள் வீசியதாக நாடகமாடியது, போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், மேலக்காவேரியைச் சேர்ந்தவர் சக்கரபாணி, 40; ஹிந்து முன்னணி மாநகர செயலர். இவரது மனைவி மாலதி, மகன் இனியன் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, வீட்டு
crime, police, arrest, crime round up, murder, கிரைம், போலீஸ், கைது

தஞ்சாவூர்: கும்பகோணத்தில், ஹிந்து முன்னணி பிரமுகர் ஒருவர், தன் வீட்டின் முன், தானே மண்ணெண்ணெய் பாட்டில் வீசிவிட்டு, மர்ம நபர்கள் வீசியதாக நாடகமாடியது, போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், மேலக்காவேரியைச் சேர்ந்தவர் சக்கரபாணி, 40; ஹிந்து முன்னணி மாநகர செயலர். இவரது மனைவி மாலதி, மகன் இனியன் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, வீட்டு வாசலில் மண்ணெண்ணெயுடன், கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறி கிடந்தது. இது குறித்து, கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு சக்கரபாணி தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம், மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் பாட்டிலை வீட்டின் முன் வீசிச் சென்றதாக கூறினார்.


தஞ்சாவூர் எஸ்.பி., ரவளிப்பிரியா, ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன், தடயவியல் துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் ஆகியோர் சக்கரபாணி வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்தினர். தஞ்சாவூரில் இருந்து மோப்ப நாய் டாபி வரவழைக்கப்பட்டு துப்பறியப்பட்டது. அந்த நாய் சிறிது துாரம் மட்டுமே ஓடியது. மேலும், அங்கு உடைந்து கிடந்த பாட்டிலை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து, அதன் கைரேகைகளை எடுத்து சோதனை நடத்தினர்.


பின்னர், சக்கரபாணியை கும்பகோணம் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறாமல், ஒரே இடத்தில் கிடந்தது. பாட்டிலில் எரிந்த திரியின் துணி, சக்கரபாணி வீட்டில் இருந்த போர்வையில் கிழிக்கப்பட்டது தெரிய வந்தது. சக்கரபாணியிடமும், அவரது மனைவியிடமும் போலீசார் தனித்தனியாக விசாரித்த போது, இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டனர்.


விளம்பரத்துக்காகவும், போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் என்பதாலும், நாடகத்தை அரங்கேற்றம் செய்ததாக, சக்கரபாணி ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக, மேலக்காவிரி வி.ஏ.ஓ., திருஞானசம்மந்தம் அளித்த புகார்படி, சக்கரபாணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.சி.பி.ஐ., அதிகாரி என 'கப்சா': கட்டட மேஸ்திரி சிக்கினார்


திருப்பூர் : திருப்பூரில், சி.பி.ஐ., அதிகாரி எனக்கூறி வலம் வந்த கட்டட மேஸ்திரியை, போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர், பவானி நகரில் வாலிபர்கள் இருவர், உளவுப்பிரிவு போலீசில் பணிபுரிவதாக மக்களிடம் கூறிக்கொண்டு வலம் வந்தனர். இது குறித்த தகவலின்படி, உளவுப்பிரிவு போலீஸ் என கூறிய இருவரிடம், தனிப்படை போலீசார் விசாரித்தனர். பாப்பநாயக்கன்பாளையம், பவானி நகர், 2வது வீதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி ராசையா, 27, சி.பி.ஐ., அதிகாரியாக இருப்பதாகவும், அவரிடம் தலா, 15 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் அவர்கள் கூறினர்.


அதிர்ச்சியடைந்த போலீசார் ராசையாவை பிடித்தனர். போலி அடையாள அட்டைகளை வைத்து கொண்டு சி.பி.ஐ., அதிகாரி என அக்கம்பக்கத்தில் கூறியபடி, ராசையா சுற்றி வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த, இரு வாலிபர்களிடம் உளவு பிரிவில் சேர்த்து விடுகிறேன் எனக்கூறி, 30 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு போலி அடையாள அட்டையை கொடுத்து, ஒவ்வொரு பகுதிக்கு சென்றும் 'போட்டோ' எடுத்து வருமாறு கூறியது தெரிந்தது. ராசையாவை கைது செய்த திருப்பூர் வடக்கு போலீசார், போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர்.மின் வாரிய அதிகாரி வீட்டில் கத்தியை காட்டி கொள்ளை


ஈரோடு : ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே செல்லப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 52; ஈரோடு மின் வாரிய அலுவலக உதவி இயக்குனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மனைவி யசோதாவுடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.


நள்ளிரவில் நான்கு பேர், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தனர். ஜெகநாதன், யசோதாவை மிரட்டி, தங்க நகை, வளையல் என, 25 சவரன் நகை, 1.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். நான்கு பேரும் முகத்தை துணியால் மறைத்து கட்டியிருந்தனர். இரு டூ - வீலர்களில் வந்துள்ளனர். சித்தோடு போலீசார், பைக் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சித்தோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடன் பிரச்னையால் பெண் வி.ஏ.ஓ., தற்கொலை


திருச்சி : மன உளைச்சல் காரணமாக, பெண் வி.ஏ.ஓ., ஒருவர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.


சென்னை, மடுவங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி, 39; மணப்பாறை பாரதியார் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்த அவர், திருச்சி மாவட்டம், தாதனுாரில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வந்தார். நேற்று காலை, அவர் பணிக்கு செல்லாததால், சக பணியாளர்கள், அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டனர். போனை எடுக்காததால், சந்தேகமடைந்த அவர்கள், வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.


வீடு உள்புறமாக பூட்டி இருந்தது. நீண்ட நேரம் அழைத்தும் கதவு திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்த போது, சுவாதி துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மணப்பாறை போலீசார், கதவை உடைத்து சுவாதியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். சுவாதி எழுதி வைத்த மூன்று பக்க கடிதத்தை கைப்பற்றினர். அதில், அதிக அளவில் கடன் வாங்கியதால், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.கணவன் கொலை: மனைவி, மைத்துனர் கைது


சங்ககிரி : கணவரை கொலை செய்த மனைவி மற்றும் மைத்துனரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.


சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள தாசநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தனபால், 44. அவரது மனைவி சரிதா, 38. இவர்களுக்கு, 20 வயதில் மகளும், 18 வயதில் மகனும் உள்ளனர். தனபாலுக்கு குடிப்பழக்கம் இருப்பதால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக சரிதா, தனபாலை பிரிந்து அவரது பெற்றோர் வீட்டில் இருக்கிறார்.


போதையில் இருந்த தனபால், நேற்று சரிதாவின் தாய் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, சரிதா, அவரது தந்தை குமாரசாமி, தாய் ராஜம்மாள், அண்ணன் சரவணன் ஆகியோர் தனபாலை தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த தனபால், சங்ககிரி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தனபாலை தாக்கிய சரிதா, அவரது அண்ணன் சரவணன், 44, ஆகியோரை கைது செய்தனர்.ஜாமின் பெற போலி ஆவணம் கொடுத்தவர் கைது


திருச்சி : திருச்சி நீதிமன்றத்தில், பணமோசடி வழக்கில் ஜாமின் பெற, போலி ஆவணம் தாக்கல் செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.


திருச்சி, பீமநகரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், 46, இலவசமாக டியூஷன் சென்டர் நடத்தி வந்தார். திருச்சி நீதிமன்றத்தில், அவர் மீதான பண மோசடி வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், ஜாமின் பெறுவதற்காக, முகமது இஸ்மாயில் தரப்பில், நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. போலியான ஆவணங்களை தயார் செய்து, சமர்ப்பித்ததை கண்டறிந்த நீதிமன்றம், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது இஸ்மாயிலை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தேசிய நிகழ்வுகள்:காதலியை 6 துண்டாக்கியவர் என்கவுன்டரில் சுடப்பட்டார்


அசம்கர்: உத்தர பிரதேசத்தில் காதலியை ஆறு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த இளைஞர், என்கவுன்டரில் சுடப்பட்டார்.


latest tamil news

உத்தர பிரதேசத்தின் அசம்கர் மாவட்டம் இஷாக்பூர் கிராமத்தில் வசித்தவர் பிரின்ஸ் யாதவ். இவர், ஆராதனா, 20, என்ற பெண்ணை காதலித்தார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்தது. ஏற்கனவே திருமணமான பிரின்சுக்கு, காதலி மீது மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன், காதலியை பைக்கில் ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.


அங்கு தன் உறவினர்கள் உதவியுடன், ஆராதனாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின், அவர் உடலை ஆறு துண்டுகளாக வெட்டி அங்குள்ள கிணற்றில் வீசினார். அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் சமீபத்தில் அளித்த தகவலையடுத்து, போலீசார் வந்து ஆய்வு செய்து, ஆராதனா உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரின்ஸ் யாதவ், 19ம் தேதி கைது செய்யப்பட்டார்.


சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் நேற்று பிரின்சை அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து, போலீசாரை நோக்கி பிரின்ஸ் சுடத் துவங்கினார். உடனடியாக சுதாரித்த போலீசார், பதிலுக்கு சுட்டதில், பிரின்ஸ் பலத்த காயமடைந்தார். ஆராதனா கொலையில் பிரின்சுக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.சிறையிலிருந்து தப்பிய 2 கைதிகள் சுட்டுக்கொலை


வாரணாசி : பீஹார் சிறையிலிருந்து தப்பிய இரண்டு கைதிகள், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில்நடந்த 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர்.


உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யின் கைத்துப்பாக்கி காணாமல் போனது. இது குறித்து போலீசார் விசாரித்தனர். அந்த துப்பாக்கியை திருடியவர், வாரணாசியில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை நோக்கி ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், இருவர் கொல்லப்பட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். அவர்களிடமிருந்து திருடப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டது.


வாரணாசி போலீசார் கூறியதாவது: என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும், பீஹார் மாநிலம் சமஷ்டிப்பூரைச் சேர்ந்த சகோதரர்கள் ரஜ்னீஷ், மணீஷ். இவர்கள் மீது பீஹாரில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவரும் பாட்னா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சில மாதங்களுக்கு முன் சிறையிலிருந்து தப்பி விட்டனர்.


இந்நிலையில் வாரணாசிக்கு வந்த அவர்கள், இங்கும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது போலீஸ் துப்பாக்கி குண்டுகளுக்கு அவர்கள் பலியாகி விட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.காதல் திருமணம் செய்த மகளை சுட்டுக் கொன்ற தந்தை


புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் மதுரா அருகே சூட்கேஸில் இளம்பெண் உடல் கிடந்த வழக்கில், அந்தப் பெண்ணின் தந்தையே கொலை செய்ததும், சூட்கேஸில் உடலை அடைக்க தாய் உதவி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.


latest tamil news

உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் யமுனா விரைவுச் சாலையில், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் அருகே சாலை ஓரத்தில் கடந்த வாரம் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. போலீசார் அதை திறந்து பார்த்த போது, அதற்குள் இளம்பெண் உடல் இருந்தது.


இதுகுறித்து, மதுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அந்தப் பெண்ணின் படத்தை போஸ்டர் அடித்து ஒட்டினர். சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். அதைப் பார்த்ததும், புதுடில்லி யில் வசிக்கும் அந்தப் பெண்ணின் தந்தை நித்தேஷ் யாதவ், உடலை அடையாளம் காண வந்தார். அப்போது அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


இதுகுறித்து போலீசர் கூறியதாவது: கொலையான ஆயுஷி, 22, வேறு ஜாதியை சேர்ந்த சத்ரபால் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் மகள் மீது ஆத்திரம் அடைந்த நித்தேஷ், மகள் என்றும் கூட பார்க்காமல் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.


மகள் உடலை சூட்கேசுக்குள் திணிக்க, அவரது தாயும் உதவி செய்துள்ளார். பின், அந்த சூட்கேசை யமுனா விரைவுச் சாலையின் ஓரம் வீசி விட்டு சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. நித்தேஷிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.சத்தீஸ்கரில் நக்சலைட் வன்முறை வெறியாட்டம்


கான்கெர்: சத்தீஸ்கரில், நக்சலைட்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், பேருந்து உட்பட மூன்று வாகனங்கள், சாலை போடும் இரண்டு இயந்திரங்கள், நான்கு 'மொபைல் போன்' கோபுரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.


சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு நக்சல்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இரு நக்சல்கள் கடந்த மாதம் 31ல் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, கான்கெர் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் முழு அடைப்புக்கு நக்சல்கள் அழைப்பு விடுத்து இருந்தனர். இந்நிலையில், கான்கெர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவில் துவங்கி நேற்று அதிகாலை வரை நக்சல்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.


கோயாலிபேடா என்ற இடத்தில் சாலை போடும் பணியில் ஈடுபட்டு இருந்த லாரி மற்றும்டிராக்டரை தீ வைத்து எரித்தனர். சாலை போட பயன்படுத்தப்பட்ட இரண்டு இயந்திரங்களுக்கும் தீ வைத்தனர். அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தையும் எரித்தனர். மேலும், கான்கெர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள நான்கு மொபைல் போன் கோபுரங்களை எரித்தனர். அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் மரத்தை வெட்டி போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர்.


சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து நிலைமையை சீர்செய்தனர். கான்கெர் மாவட்டத்தின் பானுபிரதாபுர் சட்டசபை தொகுதிக்கு அடுத்த மாதம் 5ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் வன்முறை வெடித்துள்ளதை அடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X