ஈரோடு, நவ. 22-
ஜாதி மோதலை துாண்டுவோர் மீது நடவடிக்கை கோரி, எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.
கொடுமுடி, கந்தசாமிபாளையம், கொல்லன்கோவில் கிராம கமிட்டியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், ஈரோடு எஸ்.பி.,யிடம் நேற்று மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கந்தசாமிபாளையத்தில் கடந்த, 6ல் கவுரிசங்கர் வீட்டில், சிமென்ட் அட்டை பொருத்தும் பணியில் லேத் பட்டறை உரிமையாளர் ராஜ்குமார், கல்லுாரி மாணவன் ஹரிசங்கர், 17, ஈடுபட்டனர். அப்போது தவறி விழுந்த ஹரிசங்கர் இறந்து விட்டார். இதை தொடர்ந்து மாணவன் தரப்பை சேர்ந்த சிலர், கிராமத்தில் ஜாதி மோதல்களை துாண்டிவிடும் செயல்களை மேற்கொண்டுள்ளனர்.
ஹரிசங்கர் இறந்த நாளில் ராஜ்குமார் வீட்டுக்கு வந்த சிலர் கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தினர். மறுநாளும் ஒரு கும்பல் வந்து தாக்குதலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த, சிவகிரி போலீசார் கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்தனர். ஆனால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதில் தொடர்புடைய எட்டுக்கும் மேற்பட்டோர், இதற்கு முன்பே எங்கள் கிராமத்தில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும், பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் அமைதியை சீர்குலைத்து, ஜாதி மோதல்களை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுத்து, கிராமத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.