சென்னை: அதிமுக ஆட்சியின்போது அந்த ஆட்சிக்கு எதிராகவும் மத்திய பா.ஜ., அரசின் கொள்கைக்கு எதிராகவும் பொங்கு பொங்கு என்று பொங்கி கருத்துகளை வெளியிட்டு தங்களை முற்போக்கு வாதியாகவும், போராளிகள் போலவும் காட்டிக்கொண்ட சினிமா நடிகர்கள், இப்போதைய திமுக ஆட்சியில் நடக்கும் சம்பவங்கள் பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்காமல் வாய்மூடி, மவுனமாகி விட்டனர். அது ஏன் என்று சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
பெகாசஸ் செயலியில் அரசியல் தலைவர்களின் பேச்சுகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு நடிகர் சித்தார்த், ‛பா.ஜ.,வினர் எப்போதும் பொய் சொல்கிறார்கள், எப்போதும் உளவு பார்க்கிறார்கள். எனவே நாம் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களுக்கு குட்பை சொல்லிவிடலாம்' என தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் பா.ஜ.,வினர் தங்களுக்கு எதிரானவர்களை இலக்கு வைத்து தாக்குகின்றனர் என்றும், வன்முறைச் செயல்களின் மூலம் தனது உண்மையான முகத்தை பா.ஜ.,வினர் வெளிப்படுத்துகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார்.

அதிமுக அரசு, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்ததை விமர்சித்த அவர், 'எடப்பாடி பழனிசாமி என் மாநிலத்துக்கும் நம் மக்களுக்கும் பிரதிநிதியாக இருக்கிறார் என்பது மிகவும் வெட்கமாக இருக்கிறது. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதவரளித்ததன் மூலம் அவருடைய சுயரூபமும், நேர்மையின்மையும், என்ன நடந்தாலும் பதவி முக்கியம் என்ற ஆசையும் வெளிப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
அதேபோல் அதிமுக ஆட்சியில் மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டபோதும் அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

நடிகை ஜோதிகா, ‛கோயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள்' என்று சர்ச்சை கருத்தை தெரிவித்தார். அதாவது தஞ்சை பெரிய கோயிலுக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி பராமரிக்க வேண்டும் என குரல் கொடுத்தார்.
அவரது கணவரும், நடிகருமான சூர்யாவும் இந்த கருத்துக்கு ஆதரவாக இருந்தார். அதிமுக ஆட்சியில் நடந்த இந்நிகழ்வால் சர்ச்சை ஏற்பட்டது.
நடிகர் சூர்யா, மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான கவுதமன் விவசாயிகள் பிரச்னை, மீனவர்கள் பிரச்னை, அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் என பல பிரச்னைகளுக்கு அதிமுக மற்றும் பா.ஜ., அரசை விமர்சித்து பேசியும், போராட்டம் நடத்தியும் வந்தார்.
அதேபோல் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் மத்திய அரசு மற்றும் அதிமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

எட்டு வழிச்சாலை திட்டம்
சென்னையில் இருந்து சேலத்திற்கு விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆதரவுடன் எட்டு வழிச்சாலை அமைக்க முந்தைய அதிமுக அரசு முடிவு செய்தது. எதிர்கால போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை, கண்மூடித்தனமாக இந்த போராளிகள் இவர்கள் எதிர்த்தனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பு, வேளாண்மை அழியும் என்று ஏதோ காரணத்தை கூறிக்கொண்டு ஒரு பெரிய வளர்ச்சி திட்டத்தை தடுத்தனர். அதிமுக அரசும் இந்த எதிர்ப்பை கண்டு திட்டத்தை செயல்படுத்தும் வேகத்தில் இருந்து பின்வாங்கியது. இந்த போராளிகளால் , தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
பரந்தூர் மட்டும் பரவாயில்லையா
சென்னை விமான நிலையத்தில் நெரிசல் அதிகமாக இருப்பதாக கூறி பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க திமுக அரசு ஏற்பாடு செய்தது. 4,500 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் இதற்காக எடுக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தால் பாதிக்கப்படுவோம் எனக்கூறி பரந்தூர் கிராம மக்கள் மட்டும் போராடி வருகின்றனர்.
ஆனால், இந்த திட்டம் பற்றி போராளிகள் என்று கூறிக்கொள்பவர்கள் எதுவும் பேசவில்லை. இந்த திட்டத்தால் மட்டும் யாரும் பாதிக்கப்படுவார்களா என்று அவர்கள் யோசிக்கவில்லை. இதுவே அதிமுக ஆட்சியில் இப்படி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தால், இந்நேரம் இந்த 'காகிதப்புலிகள்' கன்னாபின்னாவென்று கூச்சலிட்டிருப்பார்கள்.
இந்த போராளிகள் விளையாட்டையும் விட்டு வைக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனக்கூறி, சென்னையில் கிரிக்கெட் ஆட பெங்களூரு அணி வந்த போது, சினிமா இயக்குநர்கள் தங்கர்பச்சான், ராம், அமீர், வெற்றிமாறன், பாரதிராஜா, கவுதமன், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் அபிசரவணன் ஆகியோர் சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு ஊர்வலம் நடத்தினர். அதில், மத்திய அரசுக்கு எதிராகவும், அதிமுக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாட்டு கொடி என்று கூறி ஏதோ ஒரு கொடியை பிடித்து கொண்டு ஊர்வலத்தில் காண்பித்தனர். ஆனால், இவர்களெல்லாம், இப்போது எங்கே போனார்கள்.
மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதுபோல் நடித்து அதிமுக மற்றும் பா.ஜ., அரசை மட்டும் குறிவைத்து விமர்சிப்பதையே வேலையாக வைத்திருந்த இவர்களை போன்றவர்கள், 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிப்பெற்ற பிறகு எந்த கருத்துகளையும் தெரிவிக்காமல் மவுனமாக இருக்கின்றனர்.
திமுக ஆட்சியில் சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, கோவை குண்டுவெடிப்பு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகள் மக்களை நேரடியாக பாதித்தாலும் அதுபற்றியோ அரசின் நிர்வாகத்திறனை பற்றியோ எந்த கருத்தையும் கூறாமல் வாய்க்கு தங்களுக்கு தாங்களே பூட்டு போட்டுக்கொண்டு மவுனம் காக்கின்றனர். மாநிலத்தில் நடக்கும் எந்த சம்பவமும் இவர்களை அசைக்கவில்லை.
இதைப்பார்த்த சமூக ஆர்வலர்கள், ‛இவர்கள் உண்மையிலேயே போராளிகளா அல்லது போராளி வேஷத்தில் இருக்கும் போலிகளா என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.