பா.ஜ.,வை சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், கட்டாய மத மாற்றத்தை தடுப்பது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரித்த உச்ச நீதிமன்றம், 'கட்டாய மத மாற்றம் மிகத் தீவிரமான பிரச்னை; நாட்டின் பாதுகாப்புக்கு பெரும்அச்சுறுத்தலாக உள்ளது. இதைத் தடுக்க, மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, உத்தரவிட்டு உள்ளது.
அதாவது, 'மத சுதந்திரம் இருக்கலாம்; ஆனால், கட்டாய மத மாற்றம் என்பது சுதந்திரம் இல்லை; இது, மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான, மத சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து மாற்றுவது அல்லது இதர முறைகேடான வழிகளில் மதமாற்றம் செய்வதை தடுக்க, மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது; என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை, தெரிவிக்க வேண்டும்' என கூறியுள்ளது.
நாட்டிலேயே கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் இயற்றிய முதல் மாநிலம் ஒடிசா. 1967ம் ஆண்டிலேயே இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதைப் பின்பற்றி, ௧௯௬௮ல் மத்திய பிரதேச மாநிலமும், ௧௯௭௮ல் அருணாச்சல பிரதேசமும், ௨௦௦௬ல் சத்தீஸ்கர் மாநிலமும் கட்டாயமதமாற்றத்தை தடை செய்யும், மத சுதந்திரசட்டத்தை நிறைவேற்றின.
தமிழகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசும், 2002-ல், தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை இயற்றியது. ஆனால், 2004-ல், இச்சட்டத்தை திரும்பப் பெற்று விட்டது. இதன்பின், குஜராத்தில், ௨௦௦௩ல் மத சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களும் இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.
இந்தச் சட்டங்களின்படி, மதம் மாற விரும்புபவர்கள், இரு மாதங்களுக்கு முன்னரே, அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மதம் மாறினால், அவர்களின் அடிப்படை ஜாதியின் வாயிலாக கிடைக்கும் இட ஒதுக்கீட்டின் பலன்கள் உட்பட அனைத்து சலுகைகளையும் இழப்பர். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு, 3 ஆண்டு முதல், 5 ஆண்டு வரை சிறைதண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
சிறுவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை மதம் மாற்ற முயற்சி செய்தால், அத்தகையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க முடியும்.
நாடு சுதந்திரம் அடைந்த பின், சமூக பாகுபாடுகளை கண்டித்து, கும்பலாக மதமாற்றத்தில் ஈடுபட்டது, அரிதாகவே நடந்துள்ளது. ௧௯௫௬ல் அம்பேத்கரும், அவரின் 3 லட்சம் சீடர்களும், புத்தமதத்திற்கு மாறினர்.
அதன்பின், ௧௯௮௨ல் தமிழகத்தின் தற்போதைய தென்காசி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில், ௧௮௦ தலித் குடும்பங்களைச் சேர்ந்ததோர், ஒட்டுமொத்தமாக முஸ்லிம் மதத்திற்கு மாறினார். இந்த இரண்டு நிகழ்வுகள் மட்டுமே, அரசியல் ரீதியாக பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியவை. மற்றவை எல்லாம் சிறிய அளவில், தனிப்பட்ட நபர்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதமாற்றங்களாகும்.
கட்டாய மதமாற்றம் நடைபெறுவது, சமீபத்திய சில ஆண்டுகளில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச சதிச்செயல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், எந்த அளவுக்கு மதமாற்றம் நடந்துள்ளது; எத்தனை பேர் மதம் மாறியுள்ளனர் என்ற புள்ளி விபரங்கள் இருப்பதாக தெரியவில்லை.
இந்திய அரசியல் சட்டப்படி, எந்த ஒரு குடிமகனும் அவருக்கு பிடித்த மதத்தை தேர்வு செய்வதை, அரசு என்றைக்கும் தடுப்பதில்லை. வற்புறுத்தலின் பேரிலும், மோசடியாகவும் செய்யப்படும் மதமாற்றங்களை தடுக்கவே, பல மாநிலங்களில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தற்போது, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளதால், மதமாற்றத்தை தடுக்க தேசிய அளவில் ஒரு சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. அதை மத்திய அரசு செய்யும் என நம்பலாம்.