மதுரை:அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 'ஆர்த்தோ' டாக்டர்களுக்கு 'ஆர்த்ரோஸ்கோபி' அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்க அரசு முன்வர வேண்டும்.
முதுநிலை படிப்பில் எம்.எஸ்., ஆர்த்தோ படித்த டாக்டர்கள் உதவி பேராசிரியர்களாக பணிபுரிகின்றனர்.
ஜவ்வு பாதிப்பு
இவர்கள் எலும்பு அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் ஆர்த்ரோஸ்கோப்பி எனும் நுண்துளை அறுவை சிகிச்சை பயிற்சி பெறுவதில்லை.
விளையாட்டின் போது எலும்பு பகுதியில் அடிபட்டாலும் ஜவ்வு தான் அதிகம் பாதிக்கப்படுகிறது. உடலில் மிக நீளமான இணைப்பாக கால்மூட்டு, அடுத்ததாக தோள்பட்டை மூட்டு இணைப்பு உள்ளது.
விளையாட்டின் போது அடிபடுவதாலும் பாத்ரூமில் விழுவது, வாகன விபத்தில் கீழே விழும் போதும் கால்மூட்டு ஜவ்வு கிழிவதற்கு 50 சதவீத வாய்ப்புள்ளது.
தோள்பட்டையில் ஜவ்வு காயம் ஏற்படுவதற்கு விளையாட்டே முக்கிய காரணம்.
எலும்பு அல்லாத ஜவ்வு காயம் தான் விளையாட்டு துறையில் பொதுவாக நிகழும் விபத்து. சென்னையைச் சேர்ந்த வீராங்கனை பிரியாவுக்கு, 17, ஜவ்வு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்த போது தான் மரணமடைந்தார்.
போட்டியின் போது வீரர், வீராங்கனைகள் காயமடைந்தால் பயிற்சியாளர்கள் ஓய்வெடுக்க சொல்கின்றனர்.
தனிப்பிரிவு
அல்லது வலியின் தன்மையை பொறுத்து எலும்பு டாக்டரை அணுகும் போது முதலில் எக்ஸ்ரேவும் அடுத்து 'சி.டி., ஸ்கேன்' பார்க்க பரிந்துரைக்கின்றனர்.
எம்.ஆர்.ஐ., பரிசோதனையில் மட்டுமே ஜவ்வு கிழிந்துள்ளதா என்பதை உறுதிசெய்ய முடியும். 2006ல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விளையாட்டு காயத்திற்கான தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.
தற்போது சென்னையில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிறப்பு பிரிவாக உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் தோறும் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள ஆர்த்தோ டாக்டர்கள், இங்குள்ள சிறப்பு பிரிவில் ஆர்த்ரோஸ்கோபி பயிற்சி பெறும் போது கூடுதல் நிபுணத்துவம் பெறுவர்.
சாதாரண மண்டல போட்டியில் துவங்கி மாநில, தேசிய போட்டி வரை அனைத்து வகையான விளையாட்டுகளிலும் வீரர்கள் காயம்படுவது தொடர்கதையாக உள்ளது.
முன்வர வேண்டும்
ஆர்த்ரோஸ்கோபி பயிற்சி பெற்ற டாக்டர்கள் விளையாட்டு காயத்திற்கு சிகிச்சை அளிப்பது எளிது என்பதால் அந்தந்த மாவட்டங்களிலேயே வீரர்கள் சிகிச்சை பெற முடியும்.
தமிழக அரசு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முன்வர வேண்டும்.