ராமநாதபுரம்:பாகிஸ்தானில் நடக்கவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய கோப்பை வீல் சேர் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வினோத் பாபு 32, நிதி உதவியை எதிர்நோக்கி உள்ளார்.
பாகிஸ்தான் கராச்சியில் டிச., 21 ல் நடக்கும் இப்போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மேல செல்வனுார் வினோத் பாபு கேப்டனாக தேர்வாகிஉள்ளார்.
இவர் வாடகை வீட்டில் மின்சார வசதியின்றி சிரமப்படுகிறார். தற்போது பாகிஸ்தான் செல்ல பணம் தேவைப்படுகிறது.
இதற்கு அரசு உதவ வேண்டும் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் மனு அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள் போராடி உரிமைகளை பெற வேண்டியுள்ளது. என்னைப்போல பலர் விளையாட்டுத்துறையில் சாதிக்கின்றனர்.
அவர்களை ஊக்கப்படுத்தாததால், ஏழ்மையால் முடங்கி விடுகின்றனர்.
பாகிஸ்தான் செல்ல என்னிடம் பணம் இல்லை. விமான டிக்கெட் உள்ளிட்ட செலவிற்கு 42 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கு அரசும், நல்ல உள்ளம் கொண்டவர்கள் நிதியுதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.