ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் வட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், தமிழ் கற்கும் வட மாநில மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதல் வகுப்பில் சேரும் வடமாநில மாணவர்கள் ஆர்வமுடன் தமிழ் கற்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் வட்டத்தில் இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து இடங்களில் உள்ள 'சிப்காட்' தொழிற் பூங்காவில் 1,200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இச்தொழிற்சாலைகளில் வட மாநிலங்களான பீஹார், உத்திரபிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி பணியாற்றுகின்றனர்.
தொழிற்சாலைகள் துவங்கிய கால கட்டத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் மட்டும் ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டாரத்தில் தங்கி பணிபுரிந்தனர். தற்போது குடும்பத்துடன் தங்கி ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்கின்றனர்.
இவர்கள் தங்களின் குழைந்தைகளை ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
வடமாநில சிறுவர்கள் அரசு பள்ளிகளில் ஆர்வத்துடன் தமிழ் கற்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் வட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வசிக்கும் மாம்பாக்கம், மாத்துார், பால்நல்லுார், நெமிலி, மண்ணுார், வளர்புரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் இந்தாண்டு 5 முதல் 10 வரையிலான மாணவர்கள் சேர்ந்து தமிழ் பயின்று வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் என்.ஜி.ஒ., காலனி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இனியசெல்வி கூறுகையில், ''வடமாநில குழந்தைகள் ஆர்வத்துடன் தமிழ் கற்கின்றனர். தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதுடன் அழகாய் எழுதுகின்றனர். நேற்று முன்தினம் கூட எங்கள் பள்ளியில் பயில மூன்று வடமாநில மாணவர்கள் சேர்ந்துள்ளனர்,'' என்றார்.
மீண்டும் வருவதில்லை
ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் வடமாநில மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது.
ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் நன்றாக படிக்கின்றனர். இடையில் நான்கு, ஐந்தாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் தமிழ் கற்கவும், எழுதுவதற்கு திணறுகின்றனர்.
பள்ளியில் சேர்ந்த பின் சில மாதங்களில் சொந்த ஊருக்கு செல்லும் மாணவர்கள் திரும்பி பள்ளிக்கு வருவதில்லை. இந்த பிரச்சனையால் வடமாநில மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு சில தலைமை ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
வரவேற்கத்தக்கது
ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் கீவளூர், மாம்பாக்கம், தண்டலம், வேவளூர்குப்பம், இருங்காட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் உள்ள தமிழர்கள் பலர் வட மாநிலத்தவர்களுடன் பேசி ஹிந்தி கற்று வருகின்றனர்.
இந்நிலையில், வடமாநில குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ந்து தமிழ் கற்பது வரவேற்கத்தக்கது என தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.