கோவை:'அறை கேட்டு வருபவர்களிடம் ஆதார் நகல், மொபைல் போன் எண் ஆகியவற்றை சரிபார்த்து வாங்கிய பிறகே அனுமதிக்க வேண்டும்' என, லாட்ஜ் உரிமையாளர்களுக்கு கோவை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவையில் அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கர்நாடக மாநிலம், மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
அதில், ஈடுபட்ட முகமது ஷாரிக், கோவையில் மூன்று நாட்கள் தங்கி இருந்தார் என அறிந்த போலீசார், கடும் அதிர்ச்சிஅடைந்தனர்.
அவர் தங்கிய விடுதியில், ஷாரிக்கிடம் ஆதார் போன்ற அடையாள அட்டை எதுவும் வாங்கவில்லை என்றும், மொபைல் போன் எண் சரிபார்த்து பெறவில்லை என்றும் தெரியவந்தது.
விடுதியில், 'சிசிடிவி'யும் இல்லை. குளறுபடிகளுடன் விடுதிகளில் வெளியூர் பயணியருக்கு தங்கும் அறை கொடுப்பதால், விபரீதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக, விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை மாநகரில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 'எந்த விதமான அடையாள அட்டையும் இல்லை; மொபைல் போன் எண் இல்லை எனக்கூறி வருபவர்களுக்கு அறை தரக்கூடாது. முழு விபரங்களை தெரிவித்தால் மட்டுமே அறை தர வேண்டும்.
'அறை கேட்டு வருபவரிடம் முதலில் ஆதார் போன்ற ஏதேனும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை நகல் வாங்கிக்கொள்ள வேண்டும். அதன் ஒரிஜினலில் இருக்கும் போட்டோவையும், வந்திருக்கும் நபரையும் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்ய வேண்டும்.
'மொபைல் எண்ணை வாங்கி, அந்த எண் அவரிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். என்ன காரணத்துக்காக வந்திருக்கிறார்; எங்கெல்லாம் செல்வார்; எத்தனை நாட்கள் தங்கி இருப்பார் என்ற விபரங்களையும் லெட்ஜரில் பதிவு செய்ய வேண்டும்' என, போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், தங்கும் விடுதிகளில், 'சிசிடிவி' கேமரா கட்டாயம் நிறுவப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.