பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம்: ஆன்மிகத்தை அதிகம் நேசிக்கும் மக்கள் வசிக்கக்கூடிய திருப்பூர் மாநகரில், ஆன்மிகத்தை எதிர்த்த கருணாநிதியின் பெயரை பஸ் ஸ்டாண்டுக்கு வைக்க கூடாது; சுதந்திரத்துக்காக போராடிய திருப்பூர் குமரன் பெயரை சூட்ட வேண்டும்.
டவுட் தனபாலு: பெரும்பாலும், அந்தந்த ஊர்களில் புகழ் பெற்ற தலைவர்களின் பெயர்களையே பஸ் ஸ்டாண்டுக்கு வைப்பது வழக்கம்... அந்த வகையில், திருப்பூர் குமரன் பெயரையே சூட்டணும்... ஆனா, திராவிட மாடல் அரசு இதை எல்லாம் யோசிக்குமா என்பது, 'டவுட்' தான்.
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: காசியில் தமிழ் சங்கமம் நடத்துவது வரவேற்கத்தக்கது. தமிழகத்திற்கும், தமிழுக்கும், காசிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தாலும், அதை முன்னிறுத்தி, பா.ஜ., வளர வேண்டும் என நினைத்தால் அது நடக்காது. இதை விளம்பரமாக தான் செய்ய முடியுமே தவிர, மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது.
டவுட் தனபாலு: காங்கிரஸ் ஆட்சியில் கூட, இந்த மாதிரி காசியில் தமிழ் சங்கமம் நடத்தும் எண்ணம் உங்க தலைமையின் மனதிலும், அந்த அரசில் வளமான மத்திய அமைச்சர் பதவிகளை வகித்த தி.மு.க.,வுக்கும் தோணலை பாருங்க... தற்போது, மோடி அரசு இதை செய்வதால், உங்க காதுகளில் புகை வருவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பத்திரிகை செய்தி: தமிழக காங்., தலைவர் அழகிரி பதவி விவகாரம் தொடர்பாக, டில்லியில் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசிய தமிழக கோஷ்டி தலைவர்கள் இடையே, திடீர் மோதல் வெடித்துள்ளது.
டவுட் தனபாலு: பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், 'கதை, கதைக்குள் கதைகள்' என வித்தியாசமான படங்களை எடுப்பது வழக்கம்... அந்த மாதிரி, மாநில தலைவரை மாத்தணும்னு ஒரு கோஷ்டியா கிளம்பி போய், அந்த கோஷ்டிக்குள்ளயே மோதல் வெடிச்சு அடிச்சுக்கிட்டதை பார்த்து, கார்கேவே, 'காண்டு' ஆகியிருப்பார் என்பதில், 'டவுட்'டே இல்லை!